Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

Print PDF

தினமலர் 26.07.2010

குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

குற்றாலம் : "குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது' என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., துணைவேந்தர் சபாபதிமோகன் வலியுறுத்தி பேசினார்.

குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நேற்று 2வது நாள் சாரல் திருவிழா நடந்தது. மாலை 6 மணிக்கு துவங்கிய சாரல் திருவிழாவிற்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் சபாபதிமோகன் தலைமை வகித்து பேசினார். நெல்லை இந்தியன் பாங்க் துணை பொதுமேலாளர் மெய்யப்பன் முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் உஷாரிஷபதாஸ், மருத்துவம் மற்றும் குடும்பநல துணை இயக்குநர் நெடுஞ்செழியன், நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குநர் மீரான்முகைதீன், சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் கலுசிவலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் இந்தியன் பாங்க் மேலாளர் கிருஷ்ணகுமார், பேராசிரியர் மணிக்குமார், தென்காசி தாசில்தார் பரமசிவம், பிஆர்ஓ ரவீந்திரன், குற்றாலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜையா, பணி ஆய்வாளர் கோபி, டவுன் பஞ்., கவுன்சிலர் மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயராகவன் பேசியதாவது:- ""தமிழ்நாட்டிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. குற்றாலத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். காடுகள் மற்றும் விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

துணைவேந்தர் சபாபதிமோகன் பேசியதாவது:- ""தமிழ்நாட்டில் அதிக வெப்பம் உள்ள பகுதியாக வேலூர் விளங்கி வருகிறது. இங்கு மலைகள் உண்டு. ஆனால் மரங்கள் இல்லை. இதனால் வெப்பம் அதிகமாக உள்ளது. ஆனால் குற்றாலம் அப்படியல்ல. மலைகளும், மரங்களும், தண்ணீரும் நிறைந்த பகுதியாகவும், சுத்தமான காற்றையும் தந்து கொண்டிருக்கிறது. எனவே சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் இப்பகுதியினை பாதுகாத்திட அருவிகளில் குளிக்கும்போது ஷாம்பூ, சோப்பு போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

காடுகள், வனவிலங்குகள் போன்றவற்றை பாதுகாத்திட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நமது தலைமுறையினரும் இங்கு வந்து செல்லும் அளவிற்கு குற்றாலத்தின் வளத்தினை பெருக்கிட சுற்றுலா பயணிகள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்றார்.

முன்னதாக ஆணழகன் போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்ற தருவைகுளம் அந்தோணிராஜ், நெல்லை நாராயணன், இசக்கிமுத்து ஆகியோருக்கும், 65 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் வெற்றி பெற்ற தென்காசி யாசர் அரபாத், நெல்லை சுடலைமுத்து, பீர்முகம்மது ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் மாலை 5.30 மணியளவில் சென்னை ஸ்ரீகணபதி தியேட்டர்சின் பல்சுவை நிகழ்ச்சியும், 8 மணியளவில் கலைமாமணி முத்தரசி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சென்னை ராஜ்குமார் வழங்கிய மானாட மயிலாட நடன நிகழ்ச்சியும் நடந்தது.

சாரல் திருவிழாவின் 3வது நாளான இன்று (26ம் தேதி) மேலகரம் கணேஷ் குழுவினரின் கனியான் கூத்து, வழுவூர் ரவி குழுவினரின் திரைஇசையில் கலைஞர் நாட்டியம், டாக்டர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினரின் நாட்டுப்புற பாடல், ஆடல் நிகழ்ச்சி நடக்கிறது.