Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 26.07.2010

மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

உதகை, ஜூலை 25: நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியது:

நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் 20 மைக்ரான்களுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை அடைத்து விற்பனை செய்யவும், கேரி பேக்குகள், யூஸ் அண்டு த்ரோ டம்ளர் மற்றும் தட்டு ஆகிய பொருட்களை பயன்படுத்தவும் தடை விதித்து 2000-ம் ஆண்டிலேயே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி பிளாóடிக் கேரி பேக், டம்ளர் மற்றும் தட்டு போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்து தண்டிக்கப்படுவர் எனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் மேற்படி பொருட்களின் பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக், தட்டு மற்றும் டம்ளர் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம். அத்துடன் இத்தகைய பொருட்களை பயன்படுத்துவோரைக் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பினை மீறி விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்களிடமுள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்.

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.1,500ம், மொத்த விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.500ம், சில்லறை வியாபாரிகளுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.200ம் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நகரில் இவற்றை பயன்படுத்தினால் பிடிபடும் ஒவ்வொரு முறையும் ரூ.50 அபராதமாக விதிக்கப்படும்.

எனவே அடுத்த 15 நாட்களுக்குள் வியாபாரிகள் தற்போது தங்களிடமுள்ள தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி விட வேண்டும். இப்பொருட்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்டறிய மாவட்ட அளவில் பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 15 நாட்களுக்கு பின்னர் தங்களது ஆய்வினை தொடங்க உள்ளனர்.

எனவே, இந்த ஆய்வுக்கு முன்னதாகவே வியாபாரிகள் தங்களிடமுள்ள தடை செயப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. அதன்பின்னர் நடத்தப்படும் திடீர் ஆய்வுகளில் மேற்படி பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.