Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருத்தணியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

Print PDF

தினகரன் 28.07.2010

திருத்தணியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

திருத்தணி, ஜூலை 28: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா வரும் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருத்தணிக்கு வருவார்கள்.

இதனால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சோமசுந்தரம், ஏடிஎஸ்பி செந்தில்குமார், ஆர்டிஓ ஜெயக்குமார், தாசில்தார் விஜயராகவலு, அறங்காவலர் பொன் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி வரவேற்றார்.

கூட்டத்தில், கலெக்டர் ராஜேஷ் கூறியதாவது:

திருத்தணி முழுவதும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை வரும் 1ம் தேதி முதல் நிரந்தரமாக தடை செய்ய நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரோஸ் மில்க், ரஸ்னா, மோர் போன்றவற்றை பாக்கெட்களில் விற்பதை தடுக்க வேண்டும்.

பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் தெருக்கள், சாலைகளில் மின்விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும்.

பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள், பக்தர்களிடம் நடத்துனர்களோ, ஓட்டுநர்களோ கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவுறுத்த வேண்டும்.

காவல் உதவி மையங்கள், அவசர உதவி மையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்படவும், பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், குறைந்தபட்சம் 30 இடங்களிலாவது குடிநீர் தொட்டி வைக்க வேண்டும்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும், குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலந்த குடிநீர் நிரப்ப வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும். நல்லான் குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

விழாவை முன்னிட்டு, தற்காலிகமாக அமைக்கப்படும் 5 பஸ் நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகளும், ஓட்டல், கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

வரும் 1ம் தேதி முதல் அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். விழிப்புட னும் சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையர் செண்பகராஜன், திருத்தணி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சலபதிராவ், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அண்ணாமலை, துணை இயக்குநர் சம்பத், மாவட்ட போக்குவரத்து அலுவலர் கந்தசாமி, டிஎஸ்பி மாணிக்கம், மக்கள் தொடர்பு அலுவலர் சாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.