Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் மூன்றாவது நாளாக புகை மண்டலம்

Print PDF

தினமணி 30.07.2010

நெல்லையில் மூன்றாவது நாளாக புகை மண்டலம்

திருநெல்வேலி, ஜூலை 29: திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் பற்றிய தீ 3-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து எரிந்தது. இதனால் அப் பகுதியில் ஏற்பட்டிருந்த புகை மண்டலம் காரணமாக, பொதுமக்கள் மூன்றாவது நாளும் அவதியடைந்தனர்.

ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப் பிடித்தது. இதையடுத்து அங்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நள்ளிரவுவரை தீயணைப்புப் பணி நடைபெற்றது. பலத்தக் காற்று வீசியதால் புகை அதிகளவில் வெளியேறியது. இதனால் தீயணைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. புகையின் தாக்கம் திருநெல்வேலி மாநகர் முழுவதும் இருந்தது.

இந்த தீ புதன்கிழமையும் வேகமாக எரிந்ததால், அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. ராமையன்பட்டி பகுதியில் 5 கி.மீ. சுற்றளவுக்கு புகைமண்டலம் கருமையாக சூழ்ந்திருந்தது. புகைமண்டலத்தின் காரணமாக, வேளாங்கண்ணி நகர், சிவாஜிநகர், அரசு புதிய காலனி, ஷகிநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்றனர். மூச்சுத் திணறால் மூதாட்டி முத்தாச்சி அம்மாள் இறந்தார்.

இந்நிலையில், 3-வது நாளாக வியாழக்கிழமையும் தீ தொடர்ந்து எரிந்தது. அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. தீயணைப்புப் படை வீரர்களும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டதின் விளைவாக, ஓரளவுக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இருப்பினும் குப்பைக் கிடங்கின் உள்பகுதியில் வெப்பத்தின் அளவு குறையாமலும், தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது. இதனால் குப்பை கிடங்கின் உள்பகுதிக்குச் சென்று தீயை அணைப்பதில், தீயணைப்பு படைவீரர்கள் திணறினர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அதிகாரி டி.பத்மகுமார் கூறியதாவது:

அணைக்கப்பட்ட பகுதியிலேயே தீ மீண்டும் எரிவதால், தற்போது செயின் பொக்லைன் கொண்டு குப்பை கிளறிவிடப்பட்டு தீ அணைக்கப்படுகிறது. 6 தீயணைப்பு வாகனங்கள், 10 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஆகியவற்றுடன் 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலைக்குள் தீயை முழுமையாக அணைத்துவிடுவோம் என எதிர்பார்க்கிறோம் என்றார் பத்மகுமார்.

தீ ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதால், புகை மண்டலம் குறைந்துள்ளது. இருப்பினும் முழுமையாக தீ அணைக்கப்படாததால், அங்கு மூன்றாவது நாளாக புகை மண்டலம் முற்றுகையிட்டதுபோன்று நின்றது. இதன் விளைவாக மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். மேயர் பார்வை: இந்நிலையில் ராமையன்பட்டி உரக் கிடங்கை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ.சுப்பிரமணியன், மண்டலத் தலைவர்கள் சுப.சீதாராமன்,எஸ். விஸ்வநாதன், மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு,ஆய்வு செய்தனர்.