Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரின் மையத்தில் குப்பைக் கிடங்கு: புகை நகராகும் மன்னார்குடி

Print PDF

தினமணி 04.08.2010

நகரின் மையத்தில் குப்பைக் கிடங்கு: புகை நகராகும் மன்னார்குடி

மன்னார்குடி, ஆக. 3: மன்னார்குடியில் நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சியின் குப்பைக் கிடங்கு, அந்த நகரைப் பெரும் சுற்றுச்சூழல் அபாயத்துக்குள்ளாக்கி வருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்தக் குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன் மன்னார்குடியில் - அன்றைய சூழலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான - டெப்போ சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. அப்போதே சில நூறு அடிகள் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், அன்றைய காலகட்டத்தில் இவ்வளவு குப்பைகளோ, பாலிதீன், மின்னணு, மருத்துவக் கழிவுகள் என்று பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் குப்பை வகைளோ இல்லை என்பதால், மக்கள் இதை ஒரு பெரும் பிரச்னையாகக் கருதவில்லை.

ஆனால், இடைப்பட்ட காலகட்டத்தில் மன்னார்குடி நகரின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கும் நவீன வாழ்க்கை முறைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப தொடக்கக் காலத்தில் கொட்டப்பட்ட குப்பைகளைப்போல பல மடங்கு குப்பைகள் கொட்டப்படும் இடமாக இந்தக் கிடங்கு மாறியது.

மேலும், இந்தக் கிடங்கைச் சுற்றிலும் அந்தக் காலத்தில் வயல்வெளியாக இருந்த பகுதிகள் முழுவதும் குடியிருப்புப் பகுதிகளாக மாறின. நகரம் குப்பைக் கிடங்கிலிருந்து சில கிலோ மீட்டர்கள் கடந்து நீண்டு வளர்ந்தது.

விளைவு,ஏற்கெனவே இந்தக் குப்பைக் கிடங்கின் அருகிலிருந்த சஞ்சீவித் தெரு, ..சி சாலை, ராவணன்குட்டை ஆகிய குடியிருப்புப் பகுதிகளோடு ஆர்.பி. சிவம் நகர், மீனாட்சி நகர், அருணா நகர், கொத்தவல்லி அம்மன் நகர், மருதுபாண்டி நகர் எனப் புதிய நகர்கள் தோன்றி இந்தக் குப்பைக் கிடங்கைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகளாகக் காட்சி அளிக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.

மேலும், அரசினர் ஆய்வு மாளிகை, அரசுக் கல்லூரி, பள்ளிகள், நகரின் இரு பெரும் விளையாட்டுத் திடல்கள், வேளாண் துறை அலுவலகங்கள், மின் வாரிய அலுவலகம், காந்திஜி நினைவு மண்டபம், திருமண மண்டபங்கள் எனப் பல முக்கிய இடங்களும் இந்தக் குப்பைக் கிடங்கிலிருந்து கூப்பிடுத் தொலைவுக்குள் இருக்கின்றன.

இவ்வளவுக்கும் மத்தியில்தான் கழிவு மேலாண்மை என்றால் என்ன என்று கேட்கும் வகையில், 10 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே 10 அடி குப்பைக் குன்றுகளுடன் எந்நேரமும் புகையும் "குப்பை எரிமலை'யாகக் காட்சி அளிக்கிறது நகராட்சியின் குப்பைக் கிடங்கு.

இங்கிருந்து காற்றில் பரவும் சாம்பல் கலந்த புகையின் நெடியை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உணர முடிகிறது என்கின்றனர் நகரவாசிகள். அருகில் வசிக்கும் பலர் - குறிப்பாக குழந்தைகள், முதியோர் - மூச்சுத்திணறல் கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆனாலும்,இந்த பிரச்னையில் மன்னார்குடி நகர்மன்றத்தை ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் அக்கறை தேர்தலோடு முடிந்துவிடுகிறது என்கின்றனர்.

இதுகுறித்து இந்த பிரச்னைக்காகத் தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர் ஆர்.வி. ஆனந்த் கூறியது:

"நூறு வீடுகள்; நூறடிக்குள் குப்பைக் கிடங்கு. எவ்வளவு அபாயகரமான சூழல் இது?

மேலும், கழிவு மேலாண்மை தொடர்பான நடைமுறைகள் இங்கு துளியும் பின்பற்றப்படுவதில்லை.

அதனால், இந்த பிரச்னைஇப்போது குப்பைக் கிடங்குக்கு அருகிலுள்ள பகுதிவாழ் மக்களின் பிரச்சினையாக மட்டும் இல்லை. ஒட்டுமொத்த நகரின் பிரச்னையாகவும் மாறிவிட்டது. குளிர்க்கால இரவுகளில் நகரின் பாதி பகுதியில் இந்தப் புகைமூட்டத்தையும் சாம்பல் நெடியையும் உணர முடிகிறது.

பலர் நோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த பிரச்னைக்காகப் போராடிவருகிறோம். ஆனால், நகராட்சி நிர்வாகமோ ஆபத்தான ஒரு பிரச்னையை அலட்சியப்படுத்துகிறது.

இனியும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதோடு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அரசு நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு, வேறு இடங்களுக்கு குடிபெயரும் முடிவில் இருக்கிறோம்' என்றார் ஆனந்த்.

திரும்பிய வீதிகளெல்லாம் குளங்களுக்குப் பெயர் பெற்றது மன்னார்குடி நகரம். அந்தக் காலம் போய்விட்டது. இப்போது குப்பை எரிந்தழிந்து எழும் சாம்பல் புகை சூழ்ந்த நகரமாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலை அப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் நோயாளிகள் நகரமாக மன்னார்குடி மாறிவிடக்கூடும்.