Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தி.மலை கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

Print PDF

தினகரன் 06.08.2010

தி.மலை கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

திருவண்ணாமலை, ஆக. 6: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து குப்பைதொட்டியில் சேர்க்கும் பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு பெண் செய்துவருகிறார்.

கார்த்திகை தீபம், கிரிவலத்தால் உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரம் திருவண்ணாமலை. எனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அமைதி, இயற்கை சூழல், அண்ணாமலையார் கோயிலின் பழமை மற்றும் பிரமாண்டம், ஆசிரமங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்படும் வெளிநாட்டினர் ஆண்டுதோறும் இங்கு வந்து மாதக்கணக்கில் தங்கி செல்கின்றனர்.

அதனால், நாளுக்கு நாள் வெளிநாட்டினரின் வருகை அதிகரித்து வருகிறது. மேலும், இங்கு வரும் வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகளில் பலர் இங்கு பல்வேறு சேவைப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கிரிவலப்பாதையில் குழந்தைகள் பூங்கா, தனியார் மருத்துவமனை, காதுகேளாதோர் சிறப்பு பள்ளி போன்றவை வெளிநாட்டினரின் நேரடி முயற்சியாக உருவானது.இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தார்.

கிரிவல மலையை வலம் வந்தவருக்கும் இங்குள்ள சூழ்நிலை மிகவும் கவர்ந்தது. அதனால், திருவண்ணாமலைக்கு அடிக்கடி வருவதையும், மாதக்கணக்கில் இங்குள்ள ஆசிரமத்தில் தங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

கிரிவலம் செல்லும் போது, மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னுடன் கொண்டு செல்லும் பைகளில் சேகரித்து வருகிறார். கிரிவலம் முடிந்ததும், நகராட்சி குப்பைத் தொட்டியில் அதனை சேர்க்கிறார். இந்த சேவையை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த மாதம் திருவண்ணாமலை வந்த இவர் வாரத்துக்கு நான்கு நாட்கள் கிரிவலம் சென்று வருகிறார்.

அவரை வியப்பாக பார்க்கும் பலரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இங்கு குப்பையை சேகரிக்கிறாரே என்கிற எண்ணம்தான் தோண்றும். ஆனால், அவரது செயலுக்கு பின்னாள் மிகப்பெரிய சேவை மறைந்திருப்பது பலராலும் உணர முடியாததுதான். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, கிரிவலமலையை மிகவும் நேசிப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தன்னால் முடிந்தவரை குறைக்கவே இப்பணியை தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கிரிவலப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த நிரந்தர தடையை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். நியாயமான நீண்டநாள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.