Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல் நகரில் பாலித்தின் பைகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்த தாமதம்

Print PDF

தினகரன் 09.08.2010

திண்டுக்கல் நகரில் பாலித்தின் பைகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்த தாமதம்

திண்டுக்கல், ஆக. 9: பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாலித்தின் பைகளுக்கு திண்டுக்கல் நகரில் விதிக்கப்பட்ட தடை அமல் படுத்தப்படாததால் பாலித்தின் பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுகிறது. திண்டுக்கல் நகரில் 80க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் உள்ளன. இங்கு குடிமகன்களுக்கு பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்கப்படுகின்றன. இறைச்சிக்கடை, பலசரக்குக் கடை, பழக்கடை உள்ளிட்ட பல கடைகளில் பாலித்தின் பைகள் மூலமே பொருட்கள் விற்கப்படுகின்றன. பயன்படுத்திய பிறகு பொதுமக்கள் கண்ட இடங்களில் பாலித்தீன் பைகளை வீசி எறிகின்றனர்.

இதனால் நகர் முழுவதும் பாலித்தின் பைகள் சிதறி கிடக்கின்றன. சிலர் பிளாஸ்டிக் கப்புகளை கழிவுநீர் ஓடையிலே கொட்டுகின்றனர். கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் திண்டுக்கல்லை குப்பை இல்லாத நகரமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு நகர்மன்றத் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், ‘நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்ற பிளாஸ்டிக் கப் மற்றும் பாலித்தின் பைகளுக்கு தடைவிதிக்க வேண்டும், கவுன்சிலர்களும் கட்சி வேறுபாடின்றி இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாரிலும், கடைகளிலும் பிளாஸ்டிக் கப் மற்றும் பாலித்தின் பை விற்பனை செய்யகூடாது. விற்பனை செய்தால் பாலித்தின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் கூறினார். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகரில் பாலித்தின் பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுகின்றன. நகராட்சி தீர்மானம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையாளர் லட்சுமி கூறுகையில், ‘இன்னும் ஓரிரூ நாட்களில் பிளாஸ்டிக் கப் மற்றும் பாலித்தின் பைகள் விற்பனை செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.