Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டுரைகள்:மழைத்துளி... மழைத்துளி...!

Print PDF

தினமணி 12.08.2010

கட்டுரைகள்:மழைத்துளி... மழைத்துளி...!

கிராமம் என்றாலும், நகரம் என்றாலும், ஏழை என்றாலும், பணக்காரன் என்றாலும், தமிழன் என்றாலும், தெலுங்கன் என்றாலும், ஹிந்துவோ, முஸ்லிமோ, கருப்பனோ, வெள்ளையனோ, பேதமே பாராட்டாமல் எல்லோராலும் வாழ்த்தி வரவேற்கக்கூடிய ஒரு பொருள், மழை.

நகரத்தில் உள்ளவன், ""ஐயோ என்ன வெயில்' என்று பரிதவிக்கிறான். ""பயிர் வாடுகிறதே'' என்று கிராமத்தில் விவசாயி பரிதவிக்கிறான். ஆகாயத்தைப் பார்க்கிறான். ""மேகம் திறக்குதடி; மின்னிருட்டுக் கம்முதடி; இன்னும் கருக்குதடி; ஈசான மூலையிலே..... சித்திரையில் பார்த்துவிட்டோம் செல்லமழை பெய்யவில்லை. ஐப்பசியில் பார்த்துவிட்டோம் அடைமழை பெய்யவில்லை...'' என்று நாட்டுப்புறக்கவி பாடுகிறான்.

சித்திரையில் பெய்யாத மழை, ஐப்பசியில் பெய்யாத மழை - தை, மாசியில் பெய்து வெள்ளமாகப் பெருகிப் பல்லுயிர் குடித்துப் பெய்யாமல் கெடுத்தது போதாது என்று, பெய்து கெடுக்கிறது

இந்தியாவில் மழை எவ்வாறு பெய்கிறது? மழையின் வரையறை என்ன? இப்படி யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? இப்படி யோசித்தால் பள்ளியில் படித்த புவியியல் மறந்துவிட்டாலும் மீண்டும் ஒரு பாட்டு, "மேகங்கள் திரண்டுவந்தால் அதை மழையெனச் சொல்வதுண்டு' நினைவுக்கு வரும். இப்படித் திரளும் மேகம் எங்கோ மழையாகக் கொட்டலாம்.

""தென்மேற்குப் பருவக்காற்று மே மாதம் தொடங்குகிறது. வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபரில் வருகிறது...'' இது பள்ளியில் படித்த பாடம். தமிழில் செய்திகள் முடிந்தவுடன், வானிலைச் செய்தி அறிவிப்பாளர், ""வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு..."" என்பார். வெப்ப சலனம் இருக்கும். மழை எதுவும் இருக்காது என்று உடைத்துச் சொல்லலாமே. ""தாயே ஜக்கம்மா... ஆடி மழை பெய்யவில்லை... ஆவணி மழை பெய்யவில்லை...'' என்று பாடவேண்டியதுதான். இப்படியே தீபாவளி வந்துவிடும். வானிலை அதிகாரிகளுக்கு எல்லா தொலைக்காட்சியிலும் தினம் முகம்காட்டும் ஒரு சந்தர்ப்பமும் வந்துவிடும்...'' ""பாம்பனுக்குத் தென்கிழக்கில் 800 கி.மீ. தூரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, அது மெதுவாக வடமேற்குத் திசையில் நகர்ந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யும். 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்...'' என்று வானிலை அதிகாரி பேசுவார்.

மறுநாள் காலையில் ஒரு துண்டு மேகம்கூட இல்லாமல் சூரியன் பளிச்சென்று உதயமாகும். கடல் அமைதியாக இருக்கும். மீனவர்கள் இந்த எச்சரிக்கையைப் பொருள்படுத்த மாட்டார்கள். மறுநாள் டி.வி.யில் விளக்கம் கிடைக்கும். அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலைகொண்டுவிட்டது என்றும் ""அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை...'' என பழைய பல்லவி தொடரும். 2, 3 நாள் கழித்து அக்குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திசைமாறி நேராக வடக்கு நோக்கி நகர்ந்து, கடலூரிலிருந்து 700 கி.மீ. தூரத்தில் மையமிடும். அதன்பின் கடலூரைவிட்டு சென்னை, நெல்லூர், விசாகப்பட்டினம், பாரதீப் துறைமுகம் என்று திசைமாறி, கடைசியில் வங்கதேசத்தை புயல் தாக்கிய செய்தி வரும். அதன்பின் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்தமானுக்கு வரும்.

தை, மாசி எல்லாம் கடந்து பங்குனி மாதம் தமிழ்நாட்டில் புயலும், வெள்ளமும் தோன்றி, ஏரிகள் உடைந்து எங்கு நோக்கினும் வெள்ளக்காடு. வெள்ளத்தை வடித்துக் கடலுக்குள் விடுவார்கள். புயல் வெள்ளத்தில் சிக்கி 200 பேர் மடிவார்கள். இதுதான் மழையின் கதை? கதையல்ல தொடர்கதை!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மனித மனநிலையுடன் ஒப்பிடுவதற்குப் பொருத்தமாகப்படுகிறது. அதாவது, ""லோ ப்ரஷர்''. இதுதானே மழையின் காரணி. மற்றொரு சொல்லும் உள்ளது. அதுதான் ""டிப்ரஷன்'' இந்த லோ ப்ரஷர் அல்லது டிப்ரஷன் வங்காள விரிகுடாவில் தோன்றும்போது விவசாயிகளுக்கு ஹை ப்ரஷர் ஏற்பட்டுவிடும்.

தமிழ்நாட்டில் பெய்யும் என்று எதிர்பார்த்தால் அந்த லோ ப்ரஷர் ஆந்திர மாநிலத்திற்குத் திசைமாறிப் பெய்தால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வருவது "ஹை ப்ரஷர்', "டிப்ரஷன்'. இந்த லோ ப்ரஷர், அதாவது ஒரு குறைந்த காற்றழுத்தம் எப்படியெல்லாம் திசை மாறுகிறது? வங்காள விரிகுடாவில் தோன்றும் இக்குறைந்த காற்றழுத்தம் அந்தமானுக்குத் தெற்கே தோன்றி வடமேற்கில் நகருமா? வடக்கில் நகருமா? மேற்குத்திசையில் நகருமா? தெரியாது. ஒரிசாவில் எதிர்பார்க்கும் மழை தமிழ்நாட்டில் பெய்யலாம். தமிழ்நாட்டில் எதிர்பார்த்த மழை ஆந்திரப் பிரதேசம் செல்லலாம். இவ்வாறே திபெத்தியப் பீடபூமியிலிருந்து குறைந்த காற்றழுத்தம் தென்மேற்கில் மேகத்தைத் திரட்டி அப்பருவமழை உ.பி.யா, தில்லியா, ராஜஸ்தானா, பிகாரா, அசாமா, வங்கமா, கேரளமா, மகாராஷ்டிரமா, .பி.யா, குஜராத்தா, எங்கு கொட்டப் போகிறது என்பது யாருக்குத் தெரியும்? எங்கோ ஓரிடத்தில் பெய்வது உறுதி.

தென்மேற்குப் பருவக்காற்று வடகிழக்குப் பருவக்காற்றின் போக்கில் உருவாகும் "குறைந்த அழுத்தம்' மழைக்கு ஒரு காரணம் என்றால் "குறைந்த அழுத்தம்' ஏற்படும் காரணம் என்ன? இக்குறைந்த அழுத்தத்தின் ஆதார சுருதிகள் பசிபிக் சமுத்திரம், திபெத்தியப் பீடபூமி, யூரேசியாவின் பனிமூட்டம், வங்காள விரிகுடாவில் உள்ள நன்னீர் அளவு போன்றவை என்று கருத இடமுள்ளது.

குறைந்த அழுத்தம் என்பது சிறிய ஆற்றல். இந்தச் சிறிய ஆற்றல் 40,000 பில்லியன் டன் எடையுள்ள மழையைப் பல சமுத்திரங்களைத் தாண்டிப் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் விண்வெளிப் பயணத்தில் சுமக்க வைத்துப் பின் தன்னிடம் நிலைகொள்ள வைக்கும்போது, அச்சிறிய ஆற்றலை நாம் சரியாகப் பயன்படுத்திவிட்டால் மனிதர்களுக்கு எந்த லோ ப்ரஷரும் வராது.

பருவம் தவறிப் பெய்தாலும் வெள்ளம் வராது. எப்படியும் இந்திய மண்ணில் 8760 மணிநேரத்தில் (365 24) 100 மணிநேரம் மழை பெய்வதாக ஒரு கணக்கு உள்ளது. இப்படிப்பட்ட குறைந்த ஆற்றலுள்ள மழையைப் பயன்படுத்தாமல் அணைகளில் சேமித்த நீரையும் ஆழ்துளைக் கிணறுகளையும் அல்லவா நம்புகிறோம்.

மாபெரும் அணைக்கட்டுகளைக் கட்டவும், இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டவும் கோடி கோடியாகப் பணம் செலவழிக்கிறோம். இந்தியாவின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்கான தண்ணீரில் சுமார் 80 சதவீதம் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து பெறுகிறோம் என்ற செய்தி அதிர்ச்சியாக இல்லையா? இப்படிக் கோடி கோடியாகப் பணம் செலவழித்தும்கூட இன்னமும் இந்திய விவசாயம் மானாவாரியாகத்தான் உள்ளது. சுமார் 70 முதல் 80 சதவீதம் விளைநிலங்கள் மானாவாரி. மானாவாரி என்றால் வானம் வழங்கும் மழை. இங்கு மானம் என்பது பூமியின் மானத்தைக் காக்கும் மேகஉடை. பலதூரம் கடந்து வாரி வரும் கருமேகம் கார் விளையவும், கரிசல் காடு விளையவும் பொழிந்து, பூமியை விளைவித்து, அவமானத்தைத் துடைக்கும் இந்த மானாவாரியை மானமுள்ள தமிழன் பயன்படுத்தத் தவறிவிட்டான்.

ஆயிரம் அடிக்குக் குழாய்ச் சுரங்கம் எடுத்தாலும், ஆழ்துளைக் கிணறுகளுக்கும் மழைதான் அடிப்படை. ஆகவே, மழை எப்போது பெய்யும் என்ற தவிப்புக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, எப்போது பெய்தாலும் எனக்குச் சம்மதமே என்று வரவேற்றால் விவசாயிகளுக்கு லோ ப்ரஷர் வராது. மில்லியன் பில்லியன் என்று பணம் செலவழித்து தேசிய நெடுஞ்சாலைகளைச் சமைக்கும் இந்திய நிபுணர்களால் இன்றுள்ள தண்ணீர் நெருக்கடிக்கு ஒவ்வொரு மழைத்துளியும் நமக்கு எவ்வளவு முக்கியம் என்றுணர்ந்து அவ்வாறு பெய்யும் மழையை அதே இடத்தில் சேமித்தோ பயன்படுத்தியோ மழையை ஒழுங்காக நிர்வாகம் செய்ய முடியாதா?

இனி மழைநீர் சேமிப்பு மக்களின் பங்கேற்பாக மாறி, மழைநீர் சேமிப்பு மக்கள் குரலாகவும், ஒரு தேசியகோஷமாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும். எதிர்கால நீர்த்தேவைக்கு நதிநீர் இணைப்பு என்றும் கடல்நீர் சுத்திகரிப்பு என்றும் செலவான திட்டங்களை ஒரு கணம் மறந்துவிட்டுப் பெய்யும் மழையைச் சரியாகப் பயன்படுத்திக் கடலில் கலக்கும் மழைநீரில் குறைந்தது 75 சதவீதம் தடுத்து நிறுத்தினாலே போதும். இந்திய தேசம் முழுவதும் பரவலாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளம், தடுப்பணை, புல்வெளி, மரம் நடுதல் என்ற செயல்களுக்கு முன்னுரிமை வழங்கி மானாவாரியைப் பசுமையாக்குவதுடன் நகரங்களில் கூரைகளிலும் மேல்தளத்திலும் விழும் மழையைச் சேமிக்கப் பெரிய சம்புகள் கட்ட வேண்டும். அவரவர் குடிநீர்த் தேவையை அவரவர் வீட்டில் பெய்யும் மழையைக் கொண்டு நிறைவேற்றும் ஒரு திட்டம் வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் அப்படிச் சிலர் இயங்குவதை ஊடகங்கள் தெரிவிக்கும்போது அதை ஏன் ஒவ்வோர் இந்தியனும் பின்பற்றக்கூடாது? கிராமப்பகுதிகளில் ஏற்கெனவே நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் என்ற பெயரில் ஊரக வளர்ச்சித்துறை செயல்படுத்தி வந்தாலும், மழைநீர் சேமிப்புக்கான செயல்வடிவம் இல்லை. தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் ஒரு நடிகை தன் மேனி அழகையும் காட்டவே மழை பெய்வதாக மண்ணில் உள்ளவர்கள் எண்ணிக்கொள்வதை மாற்றி, மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் மண்ணில் நிலைநிறுத்தி வேளாண்மையில் வளம் காணவே மழை பெய்கிறது என்ற உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணரும்நாள் எந்நாளோ? அந்நாளே பொன்னான திருநாள்.