Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 ஆயிரம் லாரி கழிவுகள் அகற்றம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை முதல்வர் வைத்திலிங்கம் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 13.08.2010

6 ஆயிரம் லாரி கழிவுகள் அகற்றம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை முதல்வர் வைத்திலிங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஆக. 13: புதுவை யில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரியதில் 6 ஆயிரம் லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள் ளது என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார்.

புதுவை நகரப்பகுதியில் சிறு மழை பெய்தாலும் சாலைகளில் நீர் தேங்கிவிடுகிறது. வாய்க்கால்களில் அடைப்பு சரி செய்து மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. மழை நீர் மற்றும் கழிவுநீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க கழிவுநீர் வாய்கால் தூர் வாரும் பணியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செய்து வருகிறது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு பொதுப்பணித் துறை, புதுவை, உழவர்கரை நகராட்சிகளின் பராமரிப்புக்கு உட்பட்ட கழிவுநீர் வாய்கால் தூர்வாரும் பணிக்காக ரூ.1.9 கோடி ஒதுக்கி பணியை தொடங்கியது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் வைத்திலிங்கம், பொதுப்பணித்துறை அமைச்சர் ஷாஜகான், பொது சுகாதாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வாணரப்பேட்டை உப்பனாறு பெரியவாய்க்கால், வம்பாகீரப்பாளையம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள முகத்துவாரம் ஆகிய பகுதிகளிலும், புதுவை நகராட்சி பராமரிப்பில் உள்ள மரப்பாலம் பள்ளவாய்க்கால், தேங்காய்திட்டு ஐயனார் கோயில் வாய்கால், உழவர்கரை நகராட்சி பராமரிப்பில் உள்ள ரெயின்போ நகர் கழிவு நீர் வாய்க்கால், கருவடிக்குப்பம் சிங்கம்பார்க் கழிவு நீர் வாய்க்கால் ஆகியவற்றில் நடக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர்.

புதுவை நகராட்சி சேர்மன் ஸ்ரீதேவி, ஆணையர் அசோகன், தலைமை பொறியாளர் மனோகர், கண்காணிப்பு பொறியாளர் மாந்தையன், செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

ஆய்வு பணிக்கு பின்னர் முதல்வர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

மழைக்காலங்களில் மழைநீர், கழிவுநீர் ஆகியவை தேக்கம் ஏற்படுவதால் பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே கடந்த ஆண்டை போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகத்துவாரம், கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. கழிவுநீர் வாய்க்காலில் இருந்து இதுவரை 6 ஆயிரம் லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் ஆகியவை தூர்வாரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணி இன்னும் 6 மாதங்கள் நடக்கும்.

பொதுமக்களின் நலனையே குறிக்கோளாக கொண்டு இந்த அரசு இதுபோன்ற பணிகளை செய்து வருகிறது. பொதுமக்கள் 50 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை அரசு தடை செய்துள்ளது. இதனை அமல்படுத்துவதில் அரசு திணறிக்கொண்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். தடையை அமல்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும் அவற்றை சேகரித்து பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் பிளாஸ்டிக் குப்பைகளை அரசு ஒதுக்கியுள்ள குப்பை தொட்டியில் போட வேண்டும்.

புதுவையில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதுவை முழுக்க டிஜிட்டல் பேனர் மாதக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் சுப்பையா சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பெரிய டிஜிட்டல் பேனர் மின் கம்பியில் விழுந்து மின்தடை ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் அரசின் மேல் கோபமாக இருந்தார்கள். டிஜிட்டல் பேனர் வைத்த ஓரிரு நாட்களில் கழற்றி செல்வது தான் நாகரீகம். இதற்கு தலைவர்கள் அறிவுரைகளை கூற வேண்டும். புதுவை மக்கள் டிஜிட்டல் பேனர் கலாச்சாரத்தில்இருந்து விடுதலை பெற வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்த பின்பு கவுன்சலிங் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.