Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டி எரிப்பு எப்போது திருந்தும் நகராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர் 25.08.2010

பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டி எரிப்பு எப்போது திருந்தும் நகராட்சி நிர்வாகம்

பண்ருட்டி : பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பதை மாவட்ட நீதிபதி கண்டித்தும் நகராட்சி நிர்வாகம் மீண்டும் அதே செயலை செய்து சுற்றுச்சூழலை பாதிப்பிற்குள்ளாக்கி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் சேகரித்து அதனை கொட்டுவதற்கு இடமில்லாமல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கெடிலம் ஆற்றங்கரையொட்டி உள்ள சுடுகாட்டில் கொட்டி வந்தனர். சுடுகாட்டில் பிணம் புதைக்க இடமில்லாத அள விற்கு குப்பைகள் மலை போல் குவிந்தது.

இதனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக மணிநகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எதிரில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள உரக்கிடங்கில் குப்பைகளை கொட்டினர்.குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யாமல் கெடிலம் ஆற்றில் கொட்டுவதற்கு பச்சைகொடி காட்டினர்.இதனால் கெடிலம் ஆற்றுப் பகுதி முழுவதும் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகள் என துர்நாற்றம் வீசும் பகுதியாக விளங்கி வருகிறது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஐகோர்ட் நீதிபதி குலசேகரன் உத்தரவின் பேரில் அப்போதைய கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ராமகிருஷ்ணன், கெடிலம் ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு அப்போதைய நகராட்சி கமிஷனர் மதிவாணனிடம், இனிமேல் கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.மேலும், கடந்த ஆண்டு டி.ஆர்.., நடராஜன் கெடிலம் ஆற்றை பார்வையிட்டு மாற்று இடம் தேர்வு செய்து 10 நாளில் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் உரக்கிடங்கு அமைக்க வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் இடம் தேர்வு செய்யவில்லை.

நீதிபதி எச்சரித்து சில மாதங்கள் கழித்து மீண்டும் குப்பைகள் ஆற் றில் கொட்டப்பட்டு எரிக்கப் பட்டு வருகிறது.இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப் பணித் துறையினர் நிலத்தடி நீர் மட்டம் சேமிப்போம், மாசு ஏற்படாமல் தவிர்ப்போம் என வாசகம் மட்டும் எழுதி வைக்கின்றனரே தவிர வரும் கால சந்ததியினர் பயன்படுத்தக்கூடிய புனிதமான கெடிலம் நதிக்கரை வீணாவதை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.மக்கள் பிரதிநிதிகளும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே சுற்றுச்சூழல் பாதிக்கும் அளவிற்கு அடாவடியாக நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற் பட்ட லாரிகளில் குப்பைகளை கொண்டு சென்று எரித்து வருவதை இனி யார்தான் தட்டிக் கேட்பது என தெரியவில்லை.