Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருட்களுக்கு உசிலம்பட்டி நகராட்சியில் தடை

Print PDF

தினமலர் 27.08.2010

பிளாஸ்டிக் பொருட்களுக்கு உசிலம்பட்டி நகராட்சியில் தடை

உசிலம்பட்டி:உசிலம்பட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று மாலை 5.00 மணியளவில் நகராட்சித் தலைவி பழனியம்மாள் தங்கமலைப்பாண்டி தலைமையில் நடந்தது. கமிஷனர் சரவணகுமார், துணைத் தலைவர் சின்னன் முன்னிலை வகித்தனர். 24 வார்டுகளில் ஐந்து கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் உள்ளிட்டவற்றை கழிவு வாய்க்காலில் கொட்டுவதால், அதன் சீரான ஓட்டம் தடைபடுகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தடையை மீறி மொத்த விற்பனை, சில்லரை விற்பனை மற்றும் பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.நகராட்சி எல்லைக்குள் தன்னிச்சையாக குப்பை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றினர்.

கோழிக்கடைகளை வைத்துள்ளவர்கள் சுகாதாரமற்ற வகையில் கோழிக்கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டுவதை தடுக்கவேண்டும் என கவுன்சிலர் உக்கிரபாண்டி கோரிக்கை விடுத்தார். நகராட்சி எல்லைக்குள் ஆட்டுக்கறி கடை போடுவர்கள் ஆடுகளை ஆடு அடிக்கும் தொட்டியில் வைத்துதான் வெட்ட வேண்டும். சுகாதாரமற்ற முறையில் ஆடுகளை தெருக்களில் வெட்டினாலும், சுகாதாரமற்ற வகையில் கடையில் கறிகளை வைத்திருந்தாலும் பறிமுதல் செய்யப்படும். மேலும், குடிநீர் குழாய் இணைப்புகளில் மோட்டார் பொருத்தியிருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.