Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வியாபாரிகள் உறுதி

Print PDF

தினமணி 04.09.2010

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வியாபாரிகள் உறுதி

திருவண்ணாமலை, செப். 3: திருவண்ணாமலை நகரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிர்க்க வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நகரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு அதிகமாக உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் இரா. ஸ்ரீதரன், துணைத் தலைவர் செல்வம், எஸ்.கே.பி. கல்லூரி தலைவர் கு.கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் பிளாஸ்டிக் பொருள்களை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக வியாபாரிகள், வர்த்தக சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் இரா.ஸ்ரீதரன் பேசியது:

பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீர் நிலத்தில் செல்லாத வகையில் தடுக்கிறது. மேலும் புதைச் சாக்கடை இணைப்பில் அடைப்பை ஏற்படுத்தி சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குகிறது. தமிழக அரசு உத்தரவை செயல்படுத்தும் வகையில் சுற்றுப்புறச் சூழலை காக்கவும், நகரின் அழகை பராமரிக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

வியாபாரிகள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதே போல் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன தகன எரிவாயு மேடை மகாதீபம் மக்கள் நல அறக்கட்டளையிடம் தரப்பட்டுள்ளது. அதை பராமரிக்க அனைவரும் தாராளமாக நிதியுதவு செய்யவேண்டும் என்றார்.

ஓட்டல் அதிபர்கள் உபாத்தியாயா, மண்ணுலிங்கம், சந்துரு, வர்த்தகர் சங்கம் சார்பில் செந்தில்மாறன், தொண்டு நிறுவன பிரதிநிதி சத்யன் உள்ளிட்டோர் பேசினர்.

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பதாக ஒப்புதல் தெரிவித்தனர்.

நவீன தகனமேடை பராமரிப்புக்கு ரூ10 லட்சம் நன்கொடை வசூல்

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் ரூ54 லட்சத்தில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நவீன தகன எரிவாயு மேடை பராமரிப்புக்கு மொத்தம் ரூ10 லட்சம் நன்கொடை குவிந்துள்ளது.

இதன் பராமரிப்புப் பணி மகாதீபம் மக்கள் நல அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோரின் முயற்சியால் முதல்கட்டமாக |2.25 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டத்தில் அனைவரும் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என தலைவர் ஸ்ரீதரன் வேண்டுகோள் வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஓட்டல் அதிபர்கள் சங்கம், நகர வர்த்தகர்கள் சங்கம், பஸ் நிலைய வியாபாரிகள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் மூலம் |7.75 லட்சம் தொகை திரட்டப்பட்டது. தற்போது, நவீன தகனமேடை பராமரிப்புக்கு |10 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.