Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகரை அழகுபடுத்த 40 லட்சம் மலர்ச்செடி தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

Print PDF

தினகரன் 07.09.2010

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகரை அழகுபடுத்த 40 லட்சம் மலர்ச்செடி தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

புதுடெல்லி, செப். 7: காமன்வெல்த் விளையாட்டு போட்டியையொட்டி விளையாட்டு மைதானங்கள் உட்பட நகரம் முழுவதும் அழகுபடுத்த 40 லட்சம் மலர்ச்செடிகள் பயன்படுத்தப்படும் என்று தோட்டக் கலைத்துறை தலைமை நிர்வாக அதிகாரி சுக்தேவ் சிங் கூறினார்.

இதுபற்றி சுக்தேவ் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் அக்டோபர் 3 முதல் 14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதற்காக நகரம் முழுவதையும் அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சில் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டெல்லியை பசுமையான அழகிய நகரமாக மாற்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக நகரச்சாலைகள், பூங்காக்கள் போன்ற இடங்களிலும், முக்கிய இடங்களிலும் பல்வேறு மலர்ச்செடிகளுடன் கூடிய மண்தொட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த மண் தொட்டிகளில் குரோட்டன்ஸ், செம்பருத்தி மற்றும் போகன் வில்லா போன்ற அழகிய மலர்ச்செடிகள் இருக்கும். இதற்காக சுமார் 40 லட்சம் மலர்ச் செடிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். விளையாட்டு மைதானங்களின் வாயில்களிலும் மலர்ச்செடிகளை வைத்து அழகுபடுத்த முடிவு செய்தோம். ஆனால் பாதுகாப்பு பணிகளை அது பாதிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானங்களில் எந்தெந்த இடங்களில் மலர்ச்செடிகளை வைக்கலாம் என்று இடங்களை தேர்வு செய்து கொடுக்கும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம். அவர்கள் குறிப்பிடும் இடங்களில் மலர்ச்செடிகள் வைக்கப்படும். விளையாட்டு மைதானங்களைச் சுற்றிலும் மட்டும் அல்லாது பயிற்சி மைதானங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக அடிக்கடி கூடும் பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு சுக்தேவ் சிங் கூறினார்.