Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அபாயம் குவிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

Print PDF

தினமலர் 08.09.210

மாநகராட்சி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அபாயம் குவிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

மதுரை : மதுரை மாநகராட்சி மேலவாசல் பழைய இரும்பு, மரம் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்படுவதால், நகரின் நடுவே தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே இம்மார்க்கெட் அமைந்துள்ளது. இக்கடைகள் முன்பு, திலகர் திடல் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் இயங்கியவை. 1967ல் ஞாயிற்றுக் கிழமை சந்தையை காலி செய்ய அப்போதைய நகராட்சி உத்தரவிட்டது. அங்கிருந்த வியாபாரிகளுக்கு மேலவாசல் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பழைய இரும்பு, மரம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 146 வியாபாரிகள், காலி செய்துவிட்டு, மேலவாசல் இடத்தில் கடைகளை அமைத்தனர். சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் கடைகளை இவர்கள் நடத்துகின்றனர்.இக்கடைகளின் முன்னால், மேலவாசல் குடிசை மாற்று வாரிய வீடுகள் இருந்தன. பழுதடைந்த இவ்வீடுகள், அகற்றப்பட்ட பிறகு, அந்த இடம் காலி இடமாக இருக்கிறது. இந்த இடத்தில் தற்போது, ஏராளமான தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நகரின் மற்ற இடங்களில் சேகரிக்கப்படும் பழைய பேப்பர், பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் போன்றவை தள்ளுவண்டிகளில் இங்கு கொண்டு வந்து மார்க்கெட்டிற்கு தொடர்பு இல்லாதவர்கள், கழிவு பொருட்களை மூடைகளில் கட்டி, இங்கு குவிக்கின்றனர். இந்த பொருட்களை அங்கேயே கொட்டி, மீண்டும் விற்கக் கூடிய பொருட்களை பிரித்து எடுக்கின்றனர். இதனால் அந்த இடமே கழிவுகளின் மலையாக மாறி வருகிறது.

பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குவிக்கப்படுவதால் அந்த இடத்தில் தீ விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தின் பின்புறத்தில் குவிக்கப் பட்ட குப்பைகளால், தீ விபத்து ஏற்பட்டு, சில கடைகள் எரிந்து சாம் பலாயின. அதே போன்ற விபத்து மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வளவிற்கும் இதற்கு அருகில் தீயணைப்பு நிலையமும், எதிரில் திடீர்நகர் போலீஸ் ஸ்டேஷனும் உள்ளது. இவர்கள் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். கழிவு மூடைகளால், மார்க்கெட்டுக்குள் லாரிகள் வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரோட்டில் லாரிகள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சியும் எதிரே உள்ள திடீர் நகர் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.