Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Print PDF

தினமணி 15.09.2010

பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை,செப். 14: பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் தொடர்பாக, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர்களிடம் அறிக்கை பெற்று வாரியத் தலைவர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மேலவாசலில் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் அபாயம் விளைவிக்கும் வகையில் குவிக்கப்பட்டிருந்தது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். இப்பிரச்னை தொடர்பாக நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மேலவாசலில் இருந்த குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு விட்டது. தற்போது, யாரும் ஆக்கிரமிக்காத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டி.முருகேசன். எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதேபோன்ற வழக்கு சென்னையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் கழிவுகள் சேகரிப்புத் தொடர்பாக தடை விதிப்பது குறித்து மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது, நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிவித்தது.

அந்த நெறிமுறைகள் தற்போது பின்பற்றப்படுகிறதா என, மாவட்ட வாரியாக பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் குறித்து, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர்களிடம் அறிக்கைபெற்று, தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து வாரியத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை 18.10.2010-க்கு ஒத்திவைத்தது.