Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பிளாஸ்டிக் ஒழிப்பு தமிழகம் முழுவதும் அமலாகும்'

Print PDF

தினமணி 17.09.2010

"பிளாஸ்டிக் ஒழிப்பு தமிழகம் முழுவதும் அமலாகும்'

நாகர்கோவில், செப்.16: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டுள்ளதைப் போன்ற நிலை தமிழகம் முழுவதும் வரும். இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தெரிவித்தார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான சுற்றுச்சூழல் விருதுகளை 11 பேருக்கு வழங்கி அவர் மேலும் பேசியதாவது:

இயற்கையை அழிக்க கூடாது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவது அரசின் கடமை.

மாநிலத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கவும், கடந்த நிதியாண்டில் ரூ31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைக்கும் விஷயத்தில் எல்லோரும் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோன்ற நிலை தமிழகம் முழுவதும் வரும்.

தமிழகத்தில் 20 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய சட்டம் உள்ளது. ஆனால் பிறமாநிலங்களில் இருந்து அந்தவகையிலான பிளாஸ்டிக் பொருள்கள் இங்கு கொண்டுவரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. அவற்றை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் டன் குப்பைகள் கழிவுகளாக தேங்குவதாக தெரியவந்துள்ளது. இதில் 900 டன் பிளாஸ்டிக் குப்பைகள். மறுசுழற்சிக்கு உள்படுத்த முடியாதவை 186 டன் பிளாஸ்டிக் குப்பைகள். சிமெண்டு ஆலைகளில் ஊடுஎரிபொருளாக பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு எரிபொருளாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள், ஆன்மிக தலங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் சேருகின்றன. அந்த வகையில் 15 இடங்களைத் தேர்வு செய்து அவ்விடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் சேராத வகையில் தடுக்கும் பொருட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கடலூர், கரூர், மணலி ஆகிய இடங்களில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் புகை மாசு கண்காணிப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் மைதீன்கான்.