Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ஆட்சியர்

Print PDF

தினமணி 24.09.2010

அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ஆட்சியர்

தேனி, செப். 23: தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 6 நகராட்சிகளில் உள்ள உணவகங்கள், இறைச்சிக் கடைகள் மற்றும் இதர கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதில்லை. பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற அக்டோபர் 2-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதும் அக்டோபர் 2-ம் தேதி முதல் தடை செய்யப்படுகிறது.

மேற்கூறிய இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நோயாளிகள், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பைகள், பொருள்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.