Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 08.10.2010

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி,​​ அக்.​ 7:​ தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ​ ​ ​ ஆஷ் நினைவு பூங்கா பெயரை மாற்றக் கோரி பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.

​ தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம்,​​ மேயர் இரா.​ கஸ்தூரி தங்கம் தலைமையில் நடைபெற்றது.​ துணை மேயர் ஜே.​ தொம்மை ஜேசுவடியான்,​​ ஆணையர் பெ.​ குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​​ ​ இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

​ ​ மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 20 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு தடை விதிக்கவும்,​​ மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள்-​ 2000-ன் படி மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.​ 1000,​ சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் உபயோகிப்பவர்களுக்கு ரூ.​ 100 அபராதம் விதிக்கவும்,​​ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழிக்கவும் மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.​ ​ இந்த தடை விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.​​ தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 50 சாலைகளை சிறப்பு சாலை 2010-2011 திட்டத்தின் கீழ் ரூ.​ 20.33 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ ​

​ மானியமாக இந்த நிதியை வழங்கிய முதல்வர்,​​ துணைமுதல்வர்,​​ சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் கஸ்தூரி தங்கம் கொண்டு வந்தார்.​ ​ ​ இந்த தீர்மானமும் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டன.

​ தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட கடற்கரை சாலை,​​ ஜி.சி.​ சாலை சந்திப்பில் உள்ள ஆஷ் நினைவு பூங்காவை அழகுபடுத்தி பராமரிக்க வ.உ.சி.​ கல்வி கழகத்திடம் ஒப்படைக்க அனுமதி கோரும் தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பாஜக உறுப்பினர் வெளிநடப்பு:​​​ இந்த தீர்மானத்துக்கு பாஜக உறுப்பினர் வி.எஸ்.ஆர்.​ பிரபு எதிர்ப்பு தெரிவித்தார்.​ ஆஷ் என்பவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விடுதலை போராட்ட வீரர்களை அடக்குவதற்காக இரக்கமின்றி நடந்து கொண்டவர்.​ ​

​ எனவே ஆஷ் நினைவு பூங்கா என்பதை மாற்றி ​ ​ வஉசி பெயரைச் சூட்டி பூங்காவை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி மேயரிடம் அவர் மனு கொடுத்தார்.

​ பெயரை மாற்ற வேண்டுமானால்,​​ அது தொடர்பாக தனியாக கூட்டம் நடத்தி விவாதித்து தான் முடிவு செய்ய முடியும் என மேயர் தெரிவித்தார்.​ ​ ​ இந்த பதிலில் திருப்தியடையாத பிரபு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்றார்.