Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு: மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் தலைமையிலான குழு ஆட்சியருடன் சந்திப்பு

Print PDF

தினமணி 25.10.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு: மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் தலைமையிலான குழு ஆட்சியருடன் சந்திப்பு

நாகர்கோவில், அக். 24: காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் எஸ்வந்த்ராவ் தலைமையிலான 29 பேர் கொண்ட குழுவினர், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சனிக்கிழமை சந்தித்து பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தனர்.

அப்போது ஆட்சியர் கூறியதாவது:

மாவட்டத்தில் 3 கட்டங்களாக பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. இதற்காக 9 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. 2-ம் கட்டமாக வியாபார பெருமக்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லும்போது கையில் துணிப்பை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

3-ம் கட்டமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கட்டாயமாக தடை செய்து, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, கண்காணிப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, குப்பையில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க பூஜ்ய கழிவுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம் என்றார் ஆட்சியர்.

முன்னதாக, இக் குழுவினர் கன்னியாகுமரி, மயிலாடி பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்ட செயல்பாடுகளை நேரில் சென்று பார்த்தனர். மாமல்லபுரம் பேரூராட்சியில் இத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் ஆட்சியரிடம் அவர்கள் உறுதி தெரிவித்தனர்.