Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி                      08.11.2010

பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவாரூர், நவ. 6: திருவாரூர் நகரில் பாலிதீன் பொருள்கள் பயன்பாட்டை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் திருவாரூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பிறை. அறிவழகன் தலைமை வகித்தார். பொருளர் நாகராஜ், துணைத் தலைவர் பி. கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருவாரூர் நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு என நகர் முழுவதும் விளம்பரப்படுத்தினாலும் போதிய அளவு கண்காணிப்பு இல்லாததால், உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்களில் பாலிதீன் பைகள் பயன்பாடு குறைந்தபாடில்லை. அதைக் கட்டுப்படுத்தும் அலுவலர்களும் செயல்படவில்லை. அதேபோல, நகரில் நகர்மன்றம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர். ஆனால், அதன்பிறகு நடவடிக்கைகள் இல்லாததால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி வருகின்றன. திருவாரூர் புதிய ரயில் நிலையப் பகுதியிலிருந்து பழைய ரயில் நிலையப் பகுதிக்கு இணைப்புச் சாலைக்கு டெண்டர் விடப்பட்டும், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. திருவாரூர் - மயிலாடுதுறை அகல ரயில்பாதைப் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் முடிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உறுதியளித்தும், இதுவரை முடிக்கப்படவில்லை. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நகரில் புதை சாக்கடைத் திட்டத்தால், அனைத்துச் சாலைகளும் பழுதடைந்துள்ளன. இவற்றை விரைந்து சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொதுச் செயலர் ஆர். ரமேஷ், இணைச் செயலர் பாலகுருசாமி, அமைப்புச் செயலர் வீ. தர்மதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.