Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து அழிக்கும் திட்டம் கிராமப்புறங்களிலும் செயல்படுத்த முடிவு: ஆட்சியர்

Print PDF

தினமணி             09.11.2010

பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து அழிக்கும் திட்டம் கிராமப்புறங்களிலும் செயல்படுத்த முடிவு: ஆட்சியர்
மதுரை, நவ.8: பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து அதைப் பாதுகாப்பாக அழிக்கும் திட்டத்தை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட ஆட்சியர்

சி. காமராஜ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கனூரில் கனரா வங்கி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து அதை அழிக்கும் முயற்சியாக ராம்கோ சிமென்ட் ஆலை மூலம், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிப் பகுதிகளிலும் இதுபோன்ற முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தை கிராமப்புறங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பள்ளி மாணவ, மாணவியரும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இப்பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம், கனரா வங்கி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்றவை ஆர்வம் காட்டிவருவது வரவேற்கத்தக்கது என்றார்.

நிகழ்ச்சியில் கனரா வங்கி மூலம் பொது கடன் அட்டை 8 நபர்களுக்கும், கல்விக் கடன் 15 நபர்களுக்கும், குப்பைகளைச் சேகரிப்பதற்கு சக்கரப்பநாயக்கனூர் கிராம ஊராட்சிக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் சி.காமராஜ் வழங்கினார்.

இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எல்.சந்தானம், கனரா வங்கி துணைப் பொதுமேலாளர் பி.ஆர். பாலசந்தர், நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் ஆர்.சங்கரநாராயணன், செல்லம்பட்டி ஒன்றியத் துணைத் தலைவர் ஜெ.பாண்டி, சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிமன்றத் தலைவர் பி.ஜெயக்கொடி, முன்னோடி வங்கி மேலாளர் சுப்பிரமணியன், கனரா வங்கி மேலாளர் சேதுராமன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ரா.அண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.