Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பயன்படுத்த ஜன.1 முதல் மதுரையில் பயன்படுத்த தடை

Print PDF

தினமலர்            23.11.2010

பிளாஸ்டிக் பயன்படுத்த ஜன.1 முதல் மதுரையில் பயன்படுத்த தடை

மதுரை : மதுரையில், ஜன.1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து, மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.தமிழகத்தில் கன்னியாகுமரி உள்பட சில மாவட்டங்களில் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் எழுமலை, அழகர்கோவில் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த கலெக்டர் காமராஜ் தடை விதித்தார். மாநகராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படும் என சமீபத்தில், கமிஷனர் செபாஸ்டின் கூறியிருந்தார்.

அதன்படி, ஜன.1 முதல் மதுரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து, நேற்று மேயர் தேன்மொழி தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் மேலும், ""திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், இனிப்பு கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், கேரி பைகள், டைனிங் டேபிள் விரிப்புகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது,"" என கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நடந்த விவாதம்:சாலைமுத்து (எதிர்கட்சி தலைவர்): மாடக்குளத்தில் பெருகிய மழைநீரை கலெக்டர் பார்வையிட்டு திறந்து விடக் கூறியுள்ளார். இங்கிருந்து முத்துப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால், வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை. பொன்மேனி கால்வாய், வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீர் செல்ல வழியில்லை.

முருகேசன் (நரமைப்பு அலுவலர்): வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மன்னன் (துணை மேயர்): பொதுப்பணித்துறையினருடன் பேச உள்ளோம்.

கணேசன்: மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டியும் பல இடங்களில் மழை தண்ணீர் தேங்குகிறது.

கமிஷனர் செபாஸ்டின்: வடிகால் கட்டியதால் தான், மழை பெய்தும் பெரிய பாதிப்பு இல்லை. மழைநீர் வடிகால் பணியில் 30 சதவீதம் தான் முடிந்துள்ளது.

கணேசன்: பலமுறை கேட்டும், மாநகராட்சியின் சொத்து பட்டியல் இதுவரை கிடைக்கவில்லை.

நகரமைப்பு அலுவலர்: ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டியலில் சில சொத்துக்கள் விடுபட்டுள்ளன. இவை சரி செய்யப்பட்டு, வரும் வெள்ளிக்குள் புதிய பட்டியல் தரப்படும்.
கணேசன்: கவுன்சிலர்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை.

கமிஷனர்: கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. பதில் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலுவை (காங்.,): தெருக்களில் டெலிபோன் நிறுவனத்தினர் இஷ்டத்திற்கு தோண்டி, கேபிள் பதிக்கின்றனர். மழைக்காலத்தில் சேதமடைந்த சாலைகளில் "பேட்ச் ஒர்க்' செய்யப்படும் என கூறினீர்கள். இந்த ஆண்டாவது செய்வீர்களா?

சக்திவேல் (தலைமை பொறியாளர்): முக்கிய சாலைகளில் ஒரு வாரத்திற்கு முன்பு "பேட்ச் ஒர்க்' முடிந்துள்ளது. உள் தெருக்களில், அடுத்து இப்பணி செய்யப்படும்.

சிலுவை: கீழமாரட் வெங்காய கடைகளை இடம் மாற்ற வேண்டும். மாநகராட்சி எல்லையை விரிவாக்கினால் எத்தனை வார்டுகள், மண்டலங்கள் உருவாகும்?

கமிஷனர்: இதை முடிவு செய்ய, தனி அதிகாரிகயை அரசு நியமிக்கும். அதன் பிறகே, வார்டுகள், மண்டலங்கள் முடிவாகும்.

நாகராஜன் (மேற்கு மண்டல தலைவர்): அரசரடியில் அகலப்படுத்தப்பட்ட பாலம் அருகே சாலையை சரி செய்ய வேண்டும். முடக்குச்சாலை சேதமடைந்துள்ளது.

ராஜபாண்டியன் (.தி.மு..,): பை-பாஸ் சர்வீஸ் சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.