Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்துங்கள்: சிமென்ட் ஆலைகளுக்கு அரசு அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 27.08.2009

தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்துங்கள்: சிமென்ட் ஆலைகளுக்கு அரசு அறிவுறுத்தல்

சென்னை, ஆக.26: தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் என்று சிமென்ட் ஆலைகளுக்கு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக சிமென்ட் ஆலைகளில் தீங்கு விளைவிக்கும் கழிவுகளின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு பலவகையான காரணங்கள் இருந்தாலும், தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளின் பாதுகாப்பற்ற வெளியேற்றத்தால் பெருமளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

2008 புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 2,655 தொழிற்சாலைகள் தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 3. 14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தக் கழிவுகள் அதிக எரிதிறன் கொண்டவை. அவற்றை நிலத்தில் தேக்கி வைப்பதற்கு பதிலாக, மாற்று எரிபொருளாகவோ அல்லது மூலப்பொருளாகவோ பயன்படுத்த சிமென்ட் ஆலைகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எரிபொருள் சிக்கனமும் ஏற்படும் என்றார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன் பேசியது:

வேகமாக தொழில் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் மாசு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதைச் சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தீங்கு விளைவிக்கும் கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள "சிப்காட்' தொழில்பேட்டை வளாகத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அது, விரைவில் செயல்படத் தொடங்கும். பெருந்துறை, ஸ்ரீபெரும்புதூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற இடங்களிலும் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.