Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தரம் குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்க தடை : தர்மபுரி நகராட்சியில் அதிரடி

Print PDF

தினமலர்                 08.12.2010

தரம் குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்க தடை : தர்மபுரி நகராட்சியில் அதிரடி

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதிகளில் தரம் குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தர்மபுரி நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா தலைமையில் நடந்தது. கமிஷனர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

நாட்டான்மாது (தி.மு..,): நகராட்சி பகுதியில் தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைக்காரர்கள் மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனி மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும். முக்கியமாக தரம் குறைந்த பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.

நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா: மறு சுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களை கடைகள் பயன்படுத்த வேண்டும். தர்மபுரியில் ஏழு பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகள் செயல்படுகிறது. இந்த கம்பெனிகளுக்கு முன் அறிவிப்பு செய்யப்படும். தரமற்ற பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு 5,000 ரூபாய் அபராதமும், கடைகளுக்கு 1,000 ரூபாய் மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வேணுகோபால் (காங்.,): இது குறித்து முன் அறிவிப்பு செய்த பின்னரும் கடைகளில் தரமற்ற பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டால் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் அபராத தொகையை குறைக்க வேண்டும்.

ஆனந்தகுமார் ராஜா: அனைத்து பேக்கரி, மளிகை கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு முன் அறிவிப்பு தந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

உன்னிகிருஷ்ணன் (.தி.மு..,): தர்மபுரி, பச்சியம்மன் கோவில் அருகே இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்ய வசதி ஏற்படுத்தி தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தகுமார் ராஜா: பச்சியம்மன் கோவில் அருகே இறந்தவர்களுக்கான சடங்கு செய்ய நகராட்சி சார்பில் 10 லட்ச ரூபாயில் வசதிகள் செய்யும் பணிக்கு விரைவில் டெண்டர் விடப்படும்.

ஜெயந்தி (வி.சி.,): தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகமாகிவருகிறது. சாக்கடை கால்வாய்கள் அடைப்பட்டு உள்ளது. கொசு மருந்து அடிப்பதில்லை. வீரியம் குறைந்த கொசு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. தெருக்களில் தேக்கமடைந்துள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி ஆட்டோக்கள் மற்றும் குப்பை அள்ளும் வகனங்கள் வருவதில்லை.

ஆனந்தகுமார் ராஜா: நகராட்சி வாகனங்கள் எஃப்.சி.,க்கு அனுப்பபட்டதால் வாகனங்கள் வராமல் இருந்திருக்கும். தற்போது, வாகனங்கள் தெருக்களில் வந்து குப்பை அள்ளி சென்றால் அந்தந்த பகுதி கவுன்சிலர்களிடம் டிரைவர்கள் கையொப்பம் வாங்கி வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Last Updated on Wednesday, 08 December 2010 09:11