Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

Print PDF

தினமணி             08.12.2010

மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

மதுரை, டிச.7: ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டது. இதில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் மாநகராட்சியால் பல்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மேயர் கோ. தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பின்னர் மேயர் கோ.தேன்மொழி கூறியது:

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.. அழகிரி தனது தேர்தல் வாக்குறுதியில் மதுரையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனத் தெரிவித்தார். இதன் அடிப்படையில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் 67 பள்ளிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பண்ணைப்பட்டி, அவனியாபுரம், சக்கிமங்கலம் கழிவு நீரேற்று நிலையங்கள், கோச்சடை போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.

மரம் நடும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் கூறுகையில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், கடந்தாண்டு தெப்பக்குளத்தில் மரம் நடும் திட்டத்தினை மத்திய அமைச்சர் மு.. அழகிரி தொடக்கிவைத்தார். கல்லூரிகள், குடியிருப்புகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என தற்போதுவரை சுமார் 36,800 மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ மாணவியரிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் முனைவோர்க் கூட்டமைப்பினரும், மரம் வளர்ப்புக் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, துணை கமிஷனர் க.தர்ப்பகராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன், கனரா வங்கி மேலாளர் வரதசண்முகம், பள்ளி மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.