Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் தயாரித்தால் அபராதம்: நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி             09.12.2010

மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் தயாரித்தால் அபராதம்: நகராட்சி எச்சரிக்கை

தருமபுரி, டிச.8: மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தருமபுரி நகராட்சி எச்சரித்துள்ளது.

÷தருமபுரி நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து நகர்மன்றத் தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜா பேசியது:

÷மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கவும், புதை சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்த சாலைகளைப் புதுப்பிக்கவும் சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதில், கடந்த மாதம் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் ரூ. 2 கோடிக்கு பணிகள் எடுத்து செயல்படுத்த மன்றம் ஒப்புதல் வழங்கியது. தற்போது, கூடுதலாக ரூ. 3 கோடிக்கு மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

÷20 மைக்ரான் அளவுக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதரப் பொருள்கள் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, தருமபுரி நகராட்சியில் இத்தகைய நடைமுறையைப் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 6 நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்தல் கூடாது. கடைகளிலும் இத்தகைய பொருள்களை விற்பனை செய்தல் கூடாது. இந்த உத்தரவை மீறினால் நிறுவனங்களுக்கு ரூ. 5 ஆயிரம், கடைகளுக்கு ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும்.

÷நகர கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் ஆறுமுகஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப் சாலை ஆகியவை 2 அடி உயரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. சாலைகளின் ஓரம் மழைநீர் வழிந்தோட ரூ. 75 லட்சத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படும் என்றார் அவர். இக் கூட்டத்தில், ஆணையர் அண்ணாதுரை மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.