Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை எப்போது?

Print PDF

தினகரன்                13.12.2010

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை எப்போது?

புதுச்சேரி, டிச. 13: நாகரிகம் என்ற பெயரில் புதிது, புதிதாக ஏற்படுத்தி வரும் மாற்றங்கள்அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. முன்பெல்லாம் மளிகை கடைகளில் ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் காகிதப் பொட்டலத்தில் மடித்துக் கொடுப்பார்கள். ஓட்டல்களில் உணவு வாங்கினால் வாழை இலையில் பார்சல் கட்டித் தருவார்கள். வெளியில் செல்பவர்கள் கையில் ஒரு மஞ்சள் துணிப்பையை எடுத்துச் செல்வர்.

ஆனால் நவீன உலகில் அவை எல்லாம் மறைந்து விட்டன. ஒரு முழம் பூ வாங்கினால் கூட அதை ஒரு கேரிபேக்கில் போட்டுக் கொடுக்கிறார்கள். எங்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் வாழ்வின் முக்கிய அம்சமாக கலந்து குப்பைகளாக குவியத் தொடங்கியுள்ளன. ஒருவர் ஒரு ஆண்டில் தோராயமாக 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர்.

கொஞ்சம், கொஞ்சமாக மண்ணில் புதையும் பாலிதீன் பைகள் மண்ணின் வளத்தை கெடுத்து நிலத்தை வளம் இழக்கச் செய்கின்றன. மழைநீரை கூட பூமி உறிஞ்ச முடியாத அளவுக்கு தடை போடுகின்றன.

முன்பெல்லாம் மழை பெய்தால் ஓரிரு நாளில் தண்ணீரை நிலம் உறிஞ்சி விடும். ஆனால் இப்போது வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. கொசுக்களும் பல மடங்கு உற்பத்தியாகி மனிதர்களை சிக்குன்குன்யா என்ற பெயரில் முடக்குகின்றன.

வாய்க்கால்கள் மற்றும் சாக்கடைகளில் கழிவுநீர் செல்வதற்கு தடை ஏற்படுத்துவதும் இந்த பாலிதீன் குப்பைகள் தான். சமீபத்தில் பெய்த அடைமழையால் புதுவை ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனை எதிரில் உள்ள வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கேரிபேக், தெர்மாகோல் மற்றும் டீ கப்கள் தான் நிரம்பி வழிந்தன. இதனால் மழைநீர் வெளியே செல்லாமல் கழிவுநீருடன் ரோட்டின் நடுவில் செல்லும் நிலை ஏற்பட்டது. பூமியான்பேட்டை பெரிய வாய்க்காலிலும் இதே பிளாஸ்டிக் கழிவுகள் தான் நிரம்பியிருந்தன. மேலும், பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கால்நடை கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் உண்பதால் அவை பல்வேறு நோய் களால் பாதிக்கப்படுகின்றன.

மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்து மாற்றத்தை கொண்டு வருவது மட்டும் போதாது. கடுமையான சட்டம் மற்றும் விதிமுறைகளால் மட்டுமே இந்த பாலிதீன் பைகள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க முடியும். முதலில், மறுசுழற்சியில் திரும்பவும் பயன்படுத்த முடியாத குறைந்த தடிமனுள்ள பாலிதீன் கேரி பேக்குகள் உற்பத்தியை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

வாய்க்கால்களில் அடைப்பு தடை சட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

புதுச்சேரி அரசு கடந்த 9&12&2009ம் தேதியிட்ட அரசாணைப்படி 50 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் தூக்குப் பைகள், குவளைகள் மற்றும் தட்டுகள் போன்றவற்றை விற்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அந்த தடை சட்டம் இதுவரை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. இதற்கு என்ன காரணம்? வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என புதுவை, பாரத ரத்னா எம்ஜிஆர் பொதுநல சமூகப் பேரவை செயலாளர் சிவா தெரிவித்துள்ளார்.