Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர்     22.12.2010

பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டத்தில் முடிவு

கோவை: ""மாநகராட்சி எல்லைக் குட்பட்ட திருமண மண்டபங்கள், உணவகங்களில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தக்கூடாது,'' என, மாநகராட்சியில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகராட்சி சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. மேயர் வெங்கடாசலம் தலைமை வகித்தார், துணை கமிஷனர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, கேரிபேக் போன்றவற்றை உற்பத்தி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்து, அதை சிறு வியாபாரிகளுக்கு சில்லறையில் விற்பனை செய்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும். சாக்கடை கால்வாய், குளக்கரைகளில் இறைச்சி கழிவுகளை கொட்டும் வியாபாரிகள் மீதும், கட்டடக்கழிவுகளை குளக்கரையில் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் தேங்காத வகையில் சுகாதார பணியாளர்களை கொண்டு பணிகளை முடுக்கிவிட வேண்டும். நகரிலுள்ள பொதுக்கழிப்பிடங்களை காலை, மாலை இரு நேரமும் சுத்தம் செய்ய வேண்டும். கொசுக்களும், ஈக்களும் வராத வகையில் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும்.நகரிலுள்ள திருமண மண்டபம் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர்களை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக பேப்பர் கப்,தட்டுக்களை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். பின்பற்றாதவர் மீது நகர்நலத்துறை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.தெருவோர டிபன் கடைகள், பேல் பூரி ஸ்டால்களில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்துவதை தவிர்க்க சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பணிகளை முடுக்கிவிட முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், பங்கேற்ற கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் கூறியதாவது: மாதம்தோறும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்குழு கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை மட்டும் கூட்டி. அதிகாரிகளை வரவழைக்கின்றனர். இது வரை ஐந்து கூட்டம் நடந்து விட்டது. தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது. எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பு என்று மேயர் பதவி ஏற்றது முதல் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஐந்து ஆண்டுகளும் முடிவடையப்போகிறது. எதுவும் நடக்கவில்லை.நகர்நலத்துறையில், முன்பிருந்த அதிகாரிகளாவது கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். தற் போது எதுவும் நடப்பதில்லை. இதே நிலை நீடித்தால், கோவை மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகிவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில், மாநகராட்சி நகர் நல அலுவலர் ஹரிகிருஷ்ணன், உதவி நகர் நல அலுவலர் அருணா, சுற்றுச்சூழல் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.