Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூரில் ஆக. 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை தீவிரம்

Print PDF

தினமணி                               26.07.2012

கரூரில் ஆக. 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை தீவிரம்

கரூர், ஜூலை 25: கரூர் நகரில் ஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தொடர்பான தடை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றார் நகர்மன்ற ஆணையர் ந. ரவிச்சந்திரன்.

கரூர் நகர்மன்ற அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

கரூர் நகர்மன்றத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பது குறித்து ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், வியாபாரிகள் கால அவகாசம் கோரியதன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படும்.

கரூர் நகர்மன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வியாபாரிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகும் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வப்போது, இதற்கான சோதனைகள் நடத்தப்படும் என்றார் ஆணையர்.

கரூர் நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ் பேசியது:

பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் இணைந்து பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி மாத இறுதியில் கரூர் நகர்மன்றத்தின் சார்பில் நடத்தப்படும். வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படும். மேலும், ஊடகங்களின் மூலமாகவும் விளம்பரம் செய்யப்படும் என்றார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் பி.எஸ். சம்பத்குமார் பேசும் போது, பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப் பொருள்கள் உணவுடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்று, நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு போன்ற நோய்கள் வரலாம். எனவே, பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்றார்.

கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழகத் தலைவர் கே. ராஜு பேசும் போது, நகர்மன்ற நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிக்கிறோம். அதேநேரத்தில் எங்கள் மீது கெடுபிடி காட்டக்கூடாது என்றார்.