Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலிதீன் பைகளை ஒழிக்க சின்னாளபட்டி பேரூராட்சி நடவடிக்கை

Print PDF

தினமணி                30.07.2012

பாலிதீன் பைகளை ஒழிக்க சின்னாளபட்டி பேரூராட்சி நடவடிக்கை

திண்டுக்கல், ஜூலை 29:  சின்னாளபட்டி பேரூராட்சியில் பாலிதீன் பைகளை ஒழிக்க பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து ஞாயிற்றுக்கிழமை 50 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருவதைத் தொடர்ந்து பேரூராட்சி செயல்அலுவலர் கோட்டைச்சாமி சின்னாளபட்டி முழுவதும் சோதனை  மேற்கொண்டார். கறிக்கடைகள், பலசரக்கு கடைகள் மற்றும் அண்ணா தினசரி மார்க்கெட் பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் சுமார் 50 கிலோ பிளாஸ்டிக்  பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதுகுறித்து செயல் அலுவலர் கோட்டைச்சாமி கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாடுகளை அறவே ஒழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் 10 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. அவற்றை தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக மாற்ற கடும் சிரமப்படவேண்டியுள்ளது. பொதுமக்கள் துணி மற்றும் பேப்பர் பைகளை பயன்படுத்தினால் சுகாதாரத்திற்கு வழிவகுக்கும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நகரமாக சின்னாளபட்டி மாறிவிடும்.  இனி விடுமுறை நாள்களில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான அதிரடி சோதனை நடத்தப்படும் என்றார்.

பிளாஸ்டிக் பைகளில் ஆட்டு இறைச்சிகளை  விற்பனை செய்து வந்த கறிக்கடை உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாழை இலையில் ஆட்டு இறைச்சிகளை கொடுத்தது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.