Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி           23.08.2012

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

காங்கயம், ஆக.22: காங்கயத்தில் உள்ள கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, பறிமுதல் செய்தனர்.

உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்ய அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை தடை செய்து காங்கயம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

நகராட்சி எல்லைக்கு உள்பட்ட மளிகை, தேநீர், பேக்கரிகள், டாஸ்மாக் பார் மற்றும் இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டு, உத்தரவு நகல் வழங்கப்பட்டிருந்தது.

தடையை மீறி விற்பவர்களுக்கு முதல் முறை எச்சரிக்கையும், 2-வது முறை அபராதமும், 3-வது முறை பயன்படுத்திய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் எம்.தமிழரசு, சுகாதார ஆய்வாளர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் இணைந்து திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் பார்களிலும் புதன்கிழமை தடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது: 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு மண்ணில் மக்கிப் போகாது. பூமியில் போடப்படும் பிளாஸ்டிக் பைகளால், மழை நீர் பூமிக்குள் இறங்காமல் நிலத்தடி நீர் சேமிப்பைத் தடுக்கும். மேலும், இந்த பிளாஸ்டிக் பைகளை ஆடு, மாடுகள் உண்டு மரணம் அடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமியின் சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த நகராட்சி முற்றிலுமாக தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, முதல்முறை என்பதால் அவர்களை எச்சரித்துள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

இதுகுறித்து கடைக்காரர்கள் கூறியது: 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை தடை செய்தவுடன், அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம். ஆனால், 41 மைக்ரான் என்று கூறி வியாபாரிகள் எங்களுக்கு அளிக்கும் பைகளையே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

அதிகாரிகளின் ஆய்வின் போது, அவைகள் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ளது என்பது தெரியவந்தது. மேலும், 40 மைக்ரான் கொண்ட பைகளை எப்படி கண்டுபிடித்து வாங்குவது என்பது குறித்து அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.