Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 50 கிலோ பறிமுதல் கோபி வியாபாரிகளுக்கு அபராதம்

Print PDF
தினகரன்         09.03.2013

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 50 கிலோ பறிமுதல் கோபி வியாபாரிகளுக்கு அபராதம்


கோபி: கோபியில் நகராட்சி சுகாதாரத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 40 மைக்ரானுக்கும் குறைவான தரமுடைய பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

40 மைக்ரானுக்கும் குறைவான தரமுடைய பிளாஸ்டிக் பைகளை எளிதில் அழிக்க முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. கோபி நகராட்சி பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு 100 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாயும், சில்லரை விற்பனையாளர்களுக்கு 1000 ரூபாயும், மொத்த விற்பனையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து மூன்று முறை அபராதம் செலுத்தினால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படுவதோடு குற்ற வழக்கு தொடரப்படும் என்றும் நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை நகராட்சி ஆணையாளர் ஜான்சன் உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலர் ராம்குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் சையத்காதர், தமிழ்ச்செல்வன், செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் விஜயன், மணி, பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கடைவீதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 50 கிலோ, 5 ஆயிரம் டீ கப்புகள், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜான்சன் கூறும் போது, பொதுமக்களிடம் தடை செய்யப்பட்ட பைகள் இருந்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும் போது துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும் என்றார்.