Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை முதலில் விழிப்புணர்வு; பிறகு நடவடிக்கை

Print PDF

தினமணி 12.09.2009

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை முதலில் விழிப்புணர்வு; பிறகு நடவடிக்கை

வேலூர், செப். 11: வேலூர் மாநகராட்சி பகுதியில் செப்டம்பர் 11-க்குப் பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் எனும் அறிவிப்பைக் கைவிட்டு, விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என கடந்த மாதம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் மேயர் ப.கார்த்திகேயன் அறிவித்தார். மேலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் செப்டம்பர் 11-ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

ஆனால், வெள்ளிக்கிழமை அவ்வாறான பறிமுதல் சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. வழக்கம்போல, பிளாஸ்டிக் பயன்பாடுகள் தொடரச் செய்தன.

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, "20 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன்னரே தடை விதித்துள்ளது. அதை மாநகராட்சிப் பகுதிகளில் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, வெள்ளிக்கிழமை முதல் 20 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறோம். இதற்கான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கிறோம்.

சில வாரங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு, பிறகு கடைகளில் சோதனை நடத்தப்படும். 20 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ அவை பறிமுதல் செய்யப்படும். வைத்திருப்போர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்ய முடியாது.

இதைத் தவிர, எத்தனை மைக்ரான் அளவாக இருந்தாலும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்' என்கின்றனர்.

மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கீழ் சரிவர குப்பைகளைப் பிரித்து வாங்க முடியாதது, சாலைகளில் குவியும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்த முடியாமல் போவது போன்றவற்றை ஒப்புக்கொள்ளும் அலுவலர்கள், பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த வலுவான சட்டம் இல்லாத நிலையிலும், மக்களிடம் இரண்டறக் கலந்துவிட்ட நிலையிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் முயற்சியில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுமே தோற்றுவிட்டன என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், தமிழக அரசு ஏற்கெனவே விதித்த தடை உத்தரவைத் தற்போதுதான் மாநகராட்சி அமல்படுத்த முயற்சிக்கிறதா? அப்படியெனில், அரசு அறிவித்த தடை உத்தரவை ஒரு முறை கூட நிறைவேற்ற மாநகராட்சி முயன்றதில்லையா? மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களால் அலட்சியம் செய்யப்படுகின்றனவா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.