Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூரில் 25 ஆயிரம் மரக் கன்றுகள் நட பசுமைக் கரங்கள் இயக்கம் முடிவு

Print PDF

தினமணி 17.09.2009

கரூரில் 25 ஆயிரம் மரக் கன்றுகள் நட பசுமைக் கரங்கள் இயக்கம் முடிவு

கரூர், செப்.16: பசுமைக் கரங்கள் இயக்கத்தின் மூலமாக கரூர் பகுதிகளில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா யோகா மையத்தின் அமைப்பான பசுமைக் கரங்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சி. முனிரத்தினம் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மாசு குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதனிலிருந்து மக்களைப் பாதுகாக்க மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும் பேசினார். மேலும், பசுமைக்கரங்கள் இயக்கம் மூலமாக மரக்கன்றுகள் நடப்படுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து, கரூர் நகராட்சித் தலைவர் ப. சிவகாமசுந்தரி, தாந்தோன்றிமலை நகராட்சித் தலைவர் ரேவதிஜெயராஜ் ஆகியோர் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினர். மேலும், தங்களது பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ். கவிதா, அனைத்து வர்த்தக சங்கங்களின் தலைவர் ராஜூ, மருத்துவர் ராமமூர்த்தி, தொழிலதிபர் முத்துசாமி, பிஎஸ்என்எல் வணிக மேலாளர் வி. விமலாதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்று சுற்றுப்புறச்சூழல் மாசுபடுதல், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசினர்.

ஈஷா யோகா மையம் மூலமாக கரூர் பகுதியில் முதல்கட்டமாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். தொடர்ந்து 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகள் 3 வருடங்களுக்கு பராமரிக்கப்படும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் யோகா மைய நிர்வாகி முத்துசாமி. யோகா மைய ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், நிர்வாகிகள் ரமேஷ், எத்திராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 17 September 2009 16:24