Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலைகள்: முதல்வர் அறிவிப்பு

Print PDF
தினமணி                 02.05.2013

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலைகள்: முதல்வர் அறிவிப்பு


பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் இன்று அளித்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்தவை...

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, ஊரகப் பகுதிகளில் 1,255 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12 மற்றும்  2012-13 ஆம் ஆண்டுகளில் 153 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதில் 1,002 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிவடைந்துவிட்டன.  மீதமுள்ள சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன.  இந்த ஆண்டும் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச் சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நகரப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் 2011 ஆம் ஆண்டு 566 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்க 153 கோடியே 61 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  2012-2013 ஆம் ஆண்டில் 499 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்க 219.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  இந்தப் பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகின்றன. 2013-2014 ஆம் ஆண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 2011-12 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 446 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மறு சீரமைக்கப்பட்டன.  2012-13 ஆம் ஆண்டில் 84 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 577.70 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகளை மறு  சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் சாலைகளின் தரம் சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும் உள்ளதால் 2013-14 ஆம் ஆண்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் மறு சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுவதுடன் சாலைகளின் தரமும் உயர்கிறது.

மேலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நுண்ணுயிரி மூலம் ஏரிகளில் உள்ள நீரினைத் தூய்மையாக்குதல் திட்டம், சோலை காடுகளில் உள்ள தாவரங்களை மறு உற்பத்தி செய்தல் திட்டம், உதகை ஏரிப் பாதுகாப்பு நிதி மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள் காப்பக அறக் கட்டளையின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.