Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3,500 கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி திட்டம்

Print PDF

தினமலர்             17.06.2013

3,500 கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி திட்டம்

சென்னை:சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, 3,500 கட்டடங்களிலும், சோலார் மின் உற்பத்தி திட்டத்தை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.அனைத்து அரசு கட்டடங்களிலும், சோலார் மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கட்டடங்களிலும், மூன்று ஆண்டுகளில், சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, மாநகராட்சி அறிவித்திருந்தது.தற்போது, இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற, மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

இதற்காக, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, சமுதாயக் கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்ட, 3,500 கட்டடங்களில், முதல்கட்ட ஆய்வு பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.இந்த திட்டம் குறித்து, மாநகராட்சி மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போது, மாநகராட்சியின் ஆறு கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், 15 மண்டலங்களிலும் சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தளபரப்பு அளவீடு, திட்ட மதிப்பீடு தயாரிப்பது, சாத்திய கூறுகளை ஆராய்வது போன்ற பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குள் சோலார் மின் உற்பத்தி திட்டம், 90 சதவீத மாநகராட்சி கட்டடங்களில் செயல்பாட்டில் இருக்கும்' என்றார்.