Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்பு அவசியம்

Print PDF

தினமணி                28.06.2013

நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்பு அவசியம்

நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு, அனைவரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும், என குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

   தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பிரித்தியா தேவி அப்பன் முன்னிலை வகித்தார். ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்தும், நிலத்தடி நீரை சேமிப்பது குறித்தும் அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரியப் பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்தது:

   நீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. மாவட்டத்தில், குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழே உள்ளது.

  எதிர்காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தடுப்பணைகள், கசிவு நீர்க் குட்டைகள், ஊரணி மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

   மேலும், 2,500 பண்ணைக் குட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, பொதுமக்களும் நீரின் தேவையை உணர்ந்து, அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். குறிப்பாக, மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை அனைவரும் பின்பற்ற வேண்டும்.   

  மழை நீரைச் சேகரிக்கும் வகையில், மொட்டை மாடி, கசிவு நீர்க் குழிகள் முறை, துளையுள்ள கசிவு நீர்க் குழிகள் முறை, கசிவு நீர்ப் படுகை முறை, நீரூட்டல் கிணறு முறை (குறைந்த விட்டம், குறைந்த ஆழம், பெரிய விட்டம், அதிக ஆழம்) முறைகள் மூலம் மழைநீரை சேகரிக்கலாம் என, குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள் தெரிவித்தனர். 

  முன்னதாக, கிராம ஊராட்சிகளில் உள்ள நீர் செறிவூட்டுக் கட்டமைப்புகளின் பராமரிப்புக்கான தகவல் கையேட்டினை, ஆட்சியர் ந. வெங்கடாசலம் ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கினார்.

  கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மு.ச. பாண்டியராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் பி. மாரியப்பன்(திருச்சி மண்டலம்), துணை நிலநீர் வல்லுநர் ஆர். சீனிவாசன்,  நிர்வாகப் பொறியாளர் கோ. வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.