Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2 பேரூராட்சி அலுவலகத்தில் தேவைக்கு கிடைத்தது சோலார் மின்சாரம் அதிகாரிகள் மகிழ்ச்சி

Print PDF

தினகரன்             27.06.2013

2 பேரூராட்சி அலுவலகத்தில் தேவைக்கு கிடைத்தது சோலார் மின்சாரம் அதிகாரிகள் மகிழ்ச்சி


வேலூர், :  பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகங்களில் சூரிய சக்தி மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை சோதனை செய்து பார்த்தபோது அலுவலக தேவைகளுக்கு போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் பேரூராட்சிகளில் அலுவலக தேவைகளுக்கான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் பெற சோலார் மின் வசதி செய்யப்பட்டுள்ளது. பொது நிதியில் இருந்து தலா சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த 2 பேரூராட்சிகளிலும் தலா 3 கிலோவாட் (3,000 வாட்ஸ்) மின்சாரம் கிடைக்கும் வகையில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் சோதனை முயற்சியாக மின் உற்பத்தி நடந்தது. இதில் அலுவலக பயன்பாட்டுக்கு தேவையான அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருவதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பேரூராட்சி அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.60 ஆயிரம் முதல் 72 ஆயிரம் வரை மின் கட்டணத்துக்காக செலவிடப்படுகிறது. தற்போது சூரிய சக்தி மூலம் அலுவலக தேவைகளுக்கு மின்சாரம் கிடைப்பதால் மின் கட்டணத்துக்கு செலவு செய்துவந்த தொகை மிச்சமாகும்.

சோலார் வசதிக்கு செய்யப்பட்டுள்ள செலவுக்கு அரசிடம் இருந்து பேரூராட்சிகளுக்கு மானியம் கிடைக்கும். தற்போது நாட்ரம்பள்ளி, பென்னாத்தூர் பேரூராட்சிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த அலுவலகங்களிலும் சோலார் வசதி செய்யப்பட உள்ளது.

பள்ளிகொண்டா பேரூராட்சியில் தன்னிறைவு திட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் 20 சூரியசக்தி தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.