Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பள்ளிகளில் 3000 மரக் கன்றுகள் நட திட்டம்

Print PDF

தினமணி               01.07.2013

மாநகராட்சிப் பள்ளிகளில் 3000 மரக் கன்றுகள் நட திட்டம்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 3000 மரக் கன்றுகள் நடப்படும் என்று மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு வேம்பு, பூவரசு மரக் கன்றுகளை மேயர் நட்டார்.

ஆணையர் க.லதா, சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளி வளாகத்தில் 30 இடங்களில் மரக்கன்றுகளை மாணவ, மாணவியர் நட்டனர்.

மரக்கன்றுகளை நட்டு மேயர் பேசியது: கோவை மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் முதல் கட்டமாக 3000 மரக் கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள், மேல்நிலைப் பள்ளியில் வேம்பு, பூவரசு போன்ற நிழல் தரும் மரங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும், மரக் கன்றுகளை நடுவதிலும் மாநகராட்சி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. மாநகராட்சியிலுள்ள அனைத்து பூங்காக்களிலும் உள்ள இடத்திற்கேற்றவாறு மரக் கன்றுகள் நட திட்டமிடப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன.

நடப்படும் மரக் கன்றுகளை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும். இந்தப்  பொறுப்பு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளது. கோவையை மரங்கள் அடர்ந்த பசுமை மாநகரமாக மாற்றுவதற்கு பொதுமக்களும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

மாநகராட்சியில் உள்ள அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவசியம் ஏற்படுத்த வேண்டும். அது போல வணிக வளாகங்களில் திறந்தவெளியிடத்தில் அவசியம் மரம் வளர்க்க வேண்டும்.

மழை நீரை சேகரிக்கவும், மரம் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் மாநகராட்சி சில வழிமுறைகளை வகுத்து வருகிறது. மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல் ஆகியவை இருந்தால் மட்டுமே வரி விதிப்பு, கட்டட அனுமதி வழங்கப்படும். குடியிருப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றைக் கணக்கு எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மரம் வளர்ப்பதற்கு தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் மேயர்.

கவுண்டம்பாளையம் 8-ஆவது வார்டில் உள்ள எஸ்.பி.எம். கார்டனில் மாநகராட்சி பொது நிதி ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.9.8 லட்சம் மதிப்பில் சத்துணவு மையத்திற்கும் மேயர் அடிக்கல் நாட்டினார்.

மாநகராட்சி துணை ஆணையர் சு.சிவராசு, துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, மண்டலத் தலைவர்கள் பி.ராஜ்குமார், கே.ஆர்.ஜெயராம், எம்.பெருமாள்சாமி, கே.ஏ.ஆதிநாராயணன், பி.சாவித்திரி பார்த்திபன், நிலைக்குழுத் தலைவர்கள் அர்ச்சுனன், கணேசன், சாந்தாமணி, தாமரைச்செல்வி, நியமனக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மகேஷ்குமார், ராமமூர்த்தி, செல்வகுமார், சரஸ்வதி, சாரதா, சக்திவேல், மாரிமுத்து, மாநகரப் பொறியாளர் (பொ) சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் (பொ) கணேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.