Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

‘‘பசுமை’’ கோவையாக மாற்றுவதற்கு 1500 இடங்களில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               14.08.2013

‘‘பசுமை’’ கோவையாக மாற்றுவதற்கு 1500 இடங்களில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 1500 இடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

பசுமை கோவை

‘‘பசுமை’’ கோவையாக மாற்றுவதற்கு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்து அதில் பொதுமக்கள் பங்களிப்புடன் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி தலைமை தாங்கினார். கமிஷனர் லதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

1500 இடங்களில் பூங்கா

கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேசும்போது, கோவை மாநகராட்சி வார்டு பகுதிகளில் 277 பூங்காக்கள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 1500 இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலசங்கத்தினர் சார்பில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்கப்படும். இதனால் பசுமை கோவையாக மாறும். இந்த பூங்காக்களை பொறுத்தவரை இடங்கள் தேர்வு செய்யப்படும்போது அதில் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சுவர், கம்பிவேலி, மின்விளக்கு, தண்ணீர் வசதிகள் செய்து தரப்படும்.

50 அமைப்புகள் விண்ணப்பம்

இதைத் தொடர்ந்து அதை பராமரிக்க அனுமதி பெறும் அமைப்பினர் அங்கு மரம், செடி வளர்த்தல், நடைபாதை அமைத்தல், விளையாட்டு திடல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிக்கப்படும் சிறந்த பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த பூங்காக்கள் அமைப்பதற்கு இதுவரை 50 அமைப்பினர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான அனுமதி நிபந்தனை அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.