Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' "சூரிய சோறு!' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

Print PDF

தினமலர்             17.08.2013

சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' "சூரிய சோறு!' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்


கோவை:கோவை மாநகராட்சி சார்பில், வடகோவை மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் "சோலார் குக்கர்' முறை பரீட்சார்த்த முறையில் கையாளப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநகராட்சி பள்ளிகளில் "சோலார் குக்கர்' திட்டம் விரிவடையும்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 மேல்நிலைப்பள்ளிகளில் 10 லட்சம் ரூபாயில், பரீட்சார்த்த முறையில் சூரிய சக்தியில் இயங்கும் "சோலார் குக்கர்' மூலம், மதிய உணவு தயாரிக்கவும், சத்துணவு கூடத்தில் சமையல் காஸ் பயன்பாட்டை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சூரிய சக்தியில் இயங்கும் வீட்டு உபயோக பொருட்கள் குறித்த கருத்தரங்கு கோவையில் நடந்தது. அதில், மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை சார்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சூரிய சக்தி பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொண்டன. மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். சூரிய சக்தியில் இயங்கும் "சோலார் குக்கர்' குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் விளக்கமளித்தன.ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, "டியோராம் கொந்தர்' நிறுவனம் இரண்டு "சோலார் குக்கர்'களை, வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறுவியுள்ளது. சத்துணவு பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக "சோலார் குக்கரில்' சமைக்கின்றனர்.

3 அடி நீளம், 6 அடி அகலத்திலுள்ள இரும்பு ஸ்டாண்டில், சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில், அலுமினிய தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதில், குக்கர் வைப்பதற்காக இரும்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு தேவையானவற்றை குக்கரில் நிரப்பி, அதற்குரிய கம்பி வளையத்தில் வைக்கின்றனர்.வெயில் அதிகமாக இருந்தால், உடனடியாக சாப்பாடு அல்லது சாம்பார் தயாராகி விடுகிறது. வானிலை மந்தமாக இருந்தால், குக்கரில் உணவு வகை தயாராவதற்கு காலஅவகாசம் எடுத்துக்கொள்கிறது.

குக்கரில் அழுத்தம் ஏற்படும் போது, "விசில்' வருகிறது. அதன்பின், குக்கரை கீழே இறக்குகின்றனர், அழுத்தத்தை கண்காணிக்க குக்கரில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.பரீட்சார்த்த முறையில் "சோலார் குக்கர்' நிறுவப்பட்டுள்ளதால், மற்ற பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ""சோலார் குக்கர் திட்டத்திற்காக 10 லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டது. ""கோவையில் தட்பவெப்ப நிலைக்கு இத்திட்டம் கைகொடுக்குமா என்பதை ஆய்வு செய்ய, 1.35 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு சோலார் குக்கர்கள் வாங்கப்பட்டுள்ளது. ""பயனுள்ளதாக இருந்தால், ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரு "சோலார் குக்கர்' வாங்கப்படும். சோலார் குக்கர் பயன்பாட்டுக்கு வரும் போது, சமையல் காஸ் மற்றும் விறகு பயன்படுத்துவது குறையும்,'' என்றார்.

"கையாள மிகவும் எளிது' வடகோவை மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""சோலார் குக்கர் விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது; 35 லிட்டர் கொள்ளளவு கொண்டது. ஏழு கிலோ அரிசியை சமைக்க முடியும். தற்போது, தினமும் 3 கிலோ அரிசி சமைக்கிறோம்; 50 முட்டையை வேக வைத்துள்ளோம்.

வெயில் இருக்கும் திசைக்கு செங்குத்தாக சோலார் குக்கரை வைக்க வேண்டும். வெறும் கண்ணால், சூரிய ஒளி பிரதிபலிப்பு தகடுகளை பார்க்கக் கூடாது; கருப்புக் கண்ணாடி அணிய வேண்டும். தூசு படிந்தால், சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இந்த தகடுகளில் மரநிழல், கட்டட நிழல் படக்கூடாது என்று கூறியுள்ளனர். கையாள்வதற்கு எளிதாக உள்ளது,'' என்றார்.