Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' திட்டம்அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

Print PDF

தினமலர்             17.08.2013

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' திட்டம்அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

கோவை:கோவை மாநகராட்சியில் ஓட்டல் கழிவுகளில் இருந்து, "பயோ காஸ்' உற்பத்தி செய்து, சரவணம்பட்டி அம்மா உணவகத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை அடுத்த மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கோவை மாநகராட்சியில் 10 இடங்களில், "அம்மா உணவகம்' செயல்படுகிறது. அம்மா உணவகங்களை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி காம்ப்ளே சமீபத்தில் ஆய்வு செய்தார்.

மாநகராட்சியில் சேகரமாகும் காய்கறி கழிவு, ஓட்டல் கழிவுகளில் இருந்து பயோ காஸ் உற்பத்தி செய்து, அம்மா உணவகங்களுக்கு பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.அதையடுத்து, சரவணம்பட்டி அம்மா உணவகத்தில் இடவசதி இருந்ததால், அங்கு பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளை ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்து, பயோ காஸ் உற்பத்தியை துவங்கவும், அம்மா உணவகத்துக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:சரவணம்பட்டி அம்மா உணவகத்தில் 1.5 சென்ட் இடத்தில், 40 அடி நீளம்- 20 அடி அகலம் - 16 அடி ஆழத்தில் 9.5 லட்சம் மதிப்பீட்டில், பயோ காஸ் திட்டத்திற்கு கட்டுமான பணி நடக்கிறது. காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள், பயோ காஸ் குழிக்குள் கொட்டப்படும். தினமும் 3 டன் கழிவுகள் கொட்டி, 25 கன மீட்டர் அளவுக்கு பயோ காஸ் உற்பத்தி செய்யப்படும்.தற்போது, மூன்று நாட்களுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பயோ காஸ் திட்டத்தை அடுத்த மாதத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், முதல் மூன்று மாதத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயோ காஸ் உற்பத்தி இருக்காது. நான்காவது மாதத்தில் இருந்து, அம்மா உணவகத்தின் தேவைக்கு ஏற்ப பயோ காஸ் கிடைக்கும்.அன்றாட தேவைக்கான பயோ காஸ் கிடைக்கும் வரை, காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படும். உணவகத்தின் பயன்பாட்டுக்கு போக, மீதமுள்ள பயோ காஸ் தெருவிளக்குகளை ஒளியூட்ட பயன்படுத்தப்படும். மாநகராட்சியிலுள்ள மற்ற அம்மா உணவகங்களிலும், இத்செயல்படுத்த இடவசதி உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

மாநகராட்சியிலுள்ள தினசரி காய்கறி மார்க்கெட், மொத்த காய்கறி மார்க்கெட், ஓட்டல்கள் மூலம் தினமும் 50 டன் அளவுக்கு கழிவு ஏற்படுகிறது. இக்கழிவை கொண்டு, பயோ காஸ் திட்டம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.