Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையை பசுமை நகரமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது : பீளமேட்டில் அரங்கேற்றம்

Print PDF

தினமலர்                20.08.2013

கோவையை பசுமை நகரமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது : பீளமேட்டில் அரங்கேற்றம்

கோவை:கோவை மாநகராட்சியில், பூங்கா இடங்களில் மரம் வளர்த்து, பசுமை நகரமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, பீளமேட்டில், மரக்கன்றுகள் நடப்பட்டு, திட்டத்துக்கு, "பிள்ளையார் சுழி' போடப்பட்டுள்ளது. கோவையிலுள்ள பூங்காக்களை மேம்படுத்தி, பூங்கா மற்றும் ரோட்டோரங்களில் மரம் வளர்க்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில், 1500 பூங்காக்கள் உள்ளன. அதில், 198 பூங்காக்கள் பராமரிப்பில் உள்ளன. மீதமுள்ள பூங்காக்களை பராமரிக்கவும், மரங்கள் வளர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பூங்காக்களுக்கு தேவையான இடங்களில் சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி, மின் வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கிறது. "பராமரிப்புக்கு பொறுப்பேற்கும் அமைப்புகள், மரங்கள் வளர்க்க வேண்டும்; நடைபாதை அமைக்க வேண்டும்; விளம்பரங்கள் செய்யக்கூடாது' என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.பூங்கா பராமரிப்புக்கு, "ராக்', "சிறுதுளி', ரோட்டரி கிளப் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ அமைப்பினர் சார்பில் விருப்ப கடிதம் கொடுத்துள்ளனர். மொத்தம், 52 பூங்காக்களை பராமரிக்க விருப்பக் கடிதம் கொடுத்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி கடிதம் கொடுக்க துவங்கியுள்ளது.ராக், சிறுதுளி, ரோட்டரி கிளப் (ஜி 29) இணைந்து, பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள விநாயகா நகர், குருசாமி நகர், சிங்காநல்லூரில் உள்ள கோத்தாரி நகர், தடாகம் ரோட்டிலுள்ள சஞ்ஜீவ் காலனி, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள "ஜிகேடி' நகர், கணபதி காந்திமாநகர் ஆகிய ஆறு பூங்காக்களை மேம்படுத்துகின்றனர்.குருசாமி நகரிலுள்ள ஒரு ஏக்கர் பூங்கா இடத்தில் நேற்று முன்தினம் மரக்கன்று நடும் விழா துவங்கியது.

செண்பகம், வேம்பு, மரமல்லி உள்ளிட்ட 110 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரக்கன்றுக்கும் செங்கற்கள் கொண்டு, பாத்தி அமைக்கப்பட்டு, சொட்டு நீர் பாசனத்தில் வளர்க்க குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பூங்கா இடத்திலுள்ள மாநகராட்சி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சொட்டுநீர் பாசனத்துக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்தது, விநாயகா நகரில் 60 சென்ட் இடத்தில் மரக்கன்று நடும் பணி துவங்கியுள்ளது.மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு, ஆர்.வி.எஸ்., கல்லூரி "ரோட்ராக்ட் கிளப்'பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை மரக்கன்றுகளை கண்காணித்து, மரக்கன்றின் நிலை குறித்து "வெப்சைட்டில்' வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பூங்கா பராமரிப்பு பொறுப்பேற்றுள்ள அமைப்புகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மரக்கன்றுகள் நிலவரம் பற்றி, உடனுக்குடன் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் வேலுச்சாமி, சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா, ராக் அமைப்பின் தலைவர் சாமிநாதன், கவுரவ செயலாளர் ரவீந்திரன், ரோட்டரி மாவட்ட கவர்னர் அஜய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.மரம் வளர்க்க கரம் கொடுங்கள்!

மேயர் வேலுச்சாமி பேசுகையில், ""மக்கள் தொகை, வாகன பெருக்கம் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரம் வளர்ப்பது மட்டுமே தீர்வு. கோவையை பசுமை நகரமாக மாற்றினால் மட்டுமே, மழைவளம் பெருகும். சுத்தமான, சுகாதாரமான காற்றோட்டம் கிடைக்கும். பசுமை நகரமாக்கும் திட்டத்தை, மாநகராட்சியால் மட்டும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் இணைந்து மரம் வளர்க்க வேண்டும்,'' என்றார்.