Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் முதல் நகரம்! புகையில்லா நகரமாகிறது கோவை!

Print PDF

தினமணி 2.12.2009

தமிழகத்தில் முதல் நகரம்! புகையில்லா நகரமாகிறது கோவை!

கோவை, டிச.1: தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையை புகையில்லா நகரமாக மாநகராட்சி சார்பில் புதிய திட்டம் ஜன.1 முதல் அமல்படுத்தப்படுகிறது.

புகையில்லா கோவை என பெயரிடப்பட்டுள்ள இத் திட்டம் தனியார் தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான ஆய்வுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புகையிலை பொருட்களை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் புது சட்டம் அக்.2}ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

இதன்படி, பொதுஇடங்களில் புகைபிடிப்போர் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களில் புகைபிடிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க முடியும்.

பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் சப்}இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 22 அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களில் புகைபிடித்தால் அங்குள்ள தலைமை ஆசிரியர், முதல்வர் அல்லது தனியார் நிறுவன மேலாளர் அபராதம் விதிக்கலாம்.

இச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் புகையில்லா கோவை என்னும் சிறப்புத் திட்டத்தை அமல்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஷமேரி ஆனி அறக்கட்டளை' (மேக்ட்) தொண்டுநிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

புகையிலை கட்டுப்பாடு குறித்த மத்திய அரசின் சட்டம் குறித்து மக்களிடம் இருக்கும் விழிப்புணர்வு, ஆதரவு குறித்து 2 ஆயிரத்து 500 பேரிடம் மேக்ட் தொண்டு நிறுவன ஊழியர்கள் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.

புதிய சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்களின் வாசல் அருகே இது புகைபிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

அதன் அருகே மற்றொரு பலகையில் நிறுவன மேலாளரின் பெயர், தொலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும். அறிவிப்பு பலகை இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் யாராவது புகைபிடித்தால் அவர்களுக்கு நிறுவனத்தின் மேலாளர் அபராதம் விதிக்க வேண்டும். இல்லையெனில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுக்கு (புகைபிடித்த ஊழியர்களின் எண்ணிக்கை அடிப்படையில்) அபராதம் விதிக்கப்படும்.

தமிழகத்தில் புகையில்லா கோவை மற்றும் புகையில்லா சென்னை என இரு திட்டங்கள் கோவை மற்றும் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் தயாரித்து வருகிறோம். புகையில்லா சென்னை திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும். ஆனால், புகையில்லா கோவை இன்னும் 3 மாதங்களுக்குள் நிறைவேறிவிடும். இவ்வாறு நிறைவேறினால் தமிழகத்தின் முதல் புகையில்லா நகரமாக கோவை மாறும். இதுதவிர கோவையில் வாகனங்களில் இருந்து வரும் புகையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம்' என்கிறார் மேக்ட் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ்.சிரில் அலெக்சாண்டர்.

கோவையில் அக்.2}ம் தேதி முதல் இதுவரை பொதுஇடங்களில் புகைபிடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க குறைவான புத்தகங்களே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது கூடுதலாக 75 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. புகையில்லா கோவை திட்டத்துக்காக அதிகாரிகளுக்கு எதிர் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்படுகிறது' என்கிறார் கோவை மாநகராட்சி நகர்நல அலுவலர் (பொ)ஆர்.சுமதி.

பிற நகரங்களுக்கு முன்மாதிரியாக கோவையில் தான் புகைபிடித்தல் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புகையில்லா கோவை நகரம் திட்டம் ஜன.1 முதல் அமல்படுத்தப்படும். இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் முதல் புகையில்லா நகரமாக கோவை மாறும் என்கிறார் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா.

புகையில்லா கோவை சின்னம் இன்று வெளியீடு

புகையில்லா கோவை திட்டத்துக்கான சின்னம் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.

இத்திட்டத்துக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ராம்நகர் அஸ்வினி ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் இச் சின்னத்தை கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம் வெளியிட, மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா பெற்றுக்கொள்கிறார்.

சிறுவாணி அணை, மருதமலை கோயில், மாமன்ற கட்டடம், மணிக்கூண்டு என கோவையில் பிரபலமாக இருக்கும் இடங்களின் படங்கள் இந்த சின்னத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் புகையில்லா நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. 2}வது நகரம் என்ற பெருமையை பெற கோவை தயாராகி வருகிறது.