Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

Print PDF

தினமணி 10.12.2009

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

உதகை, டிச. 9: நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இம்மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் பாட்டீல் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தின் எழிலை மேம்படுத்தவும், தற்போதுள்ள இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக காகிதப் பைகளை பயன்படுத்தி இம்மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் முக்கியப் பகுதிகளான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதுமுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 18 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு ஆகியவற்றை நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் அபராதம் விதித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

எனவே, நீலகிரி மாவட்ட எல்லைக்குள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்க பொதுமக்களும், பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யாமல் இருக்க வியாபாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.