Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கப், பைகளுக்கு தடை:கலெக்டர் உத்தரவு அமலுக்கு வந்தது: கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுகோள்

Print PDF

தினமலர் 02.01.2010

பிளாஸ்டிக் கப், பைகளுக்கு தடை:கலெக்டர் உத்தரவு அமலுக்கு வந்தது: கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுகோள்

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால் டீக் கடைகளில் பிளாஸ்டிக் கப்களில் டீ, காப்பி கொடுப்பது ஓரளவு மட்டுமே குறைந்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் (கேரி பேக்குகள்), பிளாஸ்டிக் கப்கள் (டீக்கடைகள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் ஒருமுறை உபயோகிக்கப்படும் கப்கள்), மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து நெல்லை கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நெல்லை மாவட்டத்தை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாதமாக மாவட்ட மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் படி பிளாஸ்டிக் கழிவுகளின் குப்பைகளை சேகரித்து கொடுப்பவர்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.1 வீதம் வழங்கப்படுகிறது. கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் 20 மைக்ரானுக்கு குறைவான கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டீக் கடைகள், ஓட்டல்களில் சாம்பர், குருமா, கூட்டு மற்றும் பார்சலுக்காக பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஓட்டல்கள் மற்றும் டீக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பேப்பர் கப்களையும், பேப்பர் பைகளையும் பயன்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், கப்களை பயன்படுத்த தடை உத்தரவு நேற்று முதல் நெல்லை மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. ஆனால் ஒரு சில கடைகள் தவிர மற்ற கடைகளில் டீ, காப்பியை பிளாஸ்டிக் கப்களிலேயே வழங்கினர். சில ஓட்டல்களில் டிபன் மற்றும் சாப்பாடு வாங்க பார்சல் வாங்க கண்டிப்பாக பாத்திரம் கொண்டு வரவேண்டும் என எழுதி போட்டுள்ளனர். ஆனால் பல ஓட்டல்களில் பார்சல்கள் கவர்களில் வழங்கப்பட்டது. 20 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை கண்டிப்புடன் தடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.