Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'போகி'க்கு பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 07.01.2010

'போகி'க்கு பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தில், "போகி' பண்டிகை அன்று பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம்' என மாவட்ட கலெக்டர் விஜயகுமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அறுவடை திருநாளை பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றோம். பொங்கல் முதல் நாள், "போகி' பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம்.
இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடும் ஏற்படுகிறது. பார்க்கும் திறன் குறைபடுகிறது. இப்போன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் சட்டம் 1986 பிரிவு 15ன் படி, இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகிப்பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவு பொருட்களை கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித்திருநாளை மாசு இல்லாமலும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:53