Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமேஸ்வரம் தீவில் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை : அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 07.01.2010

ராமேஸ்வரம் தீவில் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை : அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஜன.14 முதல் பாலிதீன்,பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த உள்ள தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. விற்பனை செய்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் ,அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட ராமேஸ்வரம் தீவுப்பகுதியை பசுமைதீவாக அறிவித்து ,இப்பகுதியில் சுற்றுச்சூழலை கெடுக்கும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, கடந்த 2002 ல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. துவக்கத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இத்தடையினால், பாலிதீன் பைகளை பொதுமக்கள் முற்றிலும் தவிர்த்தனர்.இதன் பின் அதிகாரிகள் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால், மீண்டும் பயன்படுத்த துவங்கினர். பாலிதீன் பைகளை முற்றிலும் ஒழிப்பதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் இத்தடையை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராமேஸ்வரத்தில் நேற்று துணை கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்த பாலிதீன் தடை குறித்த கூட்டத்தில், இளங்கோ ஆர்.டி.., தாசில்தார் ராஜாராமன், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராஜகோபால் மற்றும் பல் துறை அதிகாரிகள் , தலைமை ஆசிரியர்கள், அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில், பொங்கல் திருநாள்(ஜன.14) முதல் பாலதீன்,பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தவும், பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரவும் முடிவு செய்யப்பட்டது. தன்னார்வ அமைப்பினரை உள்ளடக்கிய குழுவை அமைத்து, பாலிதீன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும், மண்டபத்தில் செக்போஸ்ட் அமைத்து, வாகனங்களில் பாலிதீன் பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என், துணை கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:56