Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமேசுவரத்தில் பாலிதீன் பொருளுக்குத் தடை: மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை

Print PDF

தினமணி 07.01.2010

ராமேசுவரத்தில் பாலிதீன் பொருளுக்குத் தடை: மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை

ராமேசுவரம்,ஜன.6: ராமேசுவரத்தில் ஜனவரி 14-ம் தேதிக்குப் பிறகு பாலிதீன் பொருள்கள் விற்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உதவி ஆட்சியர் ஜெயராமன் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

ராமேசுவரத்தில் பாலிதீன் பொருள்கள் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம், உதவி ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் புதன்கிழமை நடந்தது. கோட்டாட்சியர் இளங்கோ, ராமேசுவரம் தாசில்தார் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், ராமேசுவரம் நுகர்வோர் சங்கத் தலைவர் அசோகன், பெட்காட் மாநிலப் பொருளாளர் ஜெயகாந்தன், விபத்து மீட்பு சங்கச் செயலர் மகேஸ்வரன், பாம்பன் நுகர்வோர் இயக்கத் தலைவர் யூ.அருளானந்தம், கிரியேட் அறக்கட்டளை நிர்வாகி பொறியாளர் முருகன், தங்கச்சிமடம் முருகேசன், நுகர்வோர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டு யோசனை தெரிவித்தனர்.

பின்னர் உதவி ஆட்சியர் பேசியது:

ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பனில் கடந்த 2001-02-ம் ஆண்டு முதல் பாலிதீன் பை, கப்களுக்கு தடை உத்தரவு உள்ளது. இதனை மேலும் தீவிரமாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். ஜன.14-ம் தேதிக்குப் பிறகு தீவுப் பகுதியில் பாலிதீன் பொருள்கள் விற்கும் மொத்த, சில்லறை வியாபாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலிதீன் பொருள் ஒழிப்புக்கு தீவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், தொண்டு அமைப்புகளும் ஒத்துழைப்புத் தரவேண்டும். பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் பல்வேறு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 07 January 2010 10:57