Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெரினாவில் குவிந்த பாலிதீன் குப்பைகள்

Print PDF

தினமணி 18.01.2010

மெரினாவில் குவிந்த பாலிதீன் குப்பைகள்

காணும் பொங்கலன்று பாலிதீன் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து அசுத்தமடைந்த மெரினா கடற்கரை.

சென்னை, ஜன. 17: சென்னை மெரினா கடற்கரையில் பாலிதீன் குப்பைகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்து கிடந்தன.சனிக்கிழமை காணும் பொங்கலன்று கூடிய சுற்றுலாப் பயணிகள் விட்டுச் சென்ற இந்த குப்பைகள் மெரினாவில் அழகைக் கெடுத்ததுடன், கடல் வளம் பாதிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மெரினா கடற்கரை பகுதிகளில் பாலிதீன் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாநகராட்சி தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் காணும் பொங்கலான சனிக்கிழமையன்று மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அன்றைய தினம் உலகின் நீளமான கடற்கரையான மெரினாவிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.

அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடம், நீச்சல் குளம், கண்கவர் புல்வெளிப் பகுதி, அழகிய கடற்கரைக் காட்சி ஆகியவற்றைக் கண்டு ரசித்து காணும் பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய மக்கள் அதிக அளவில் பாலித்தீன் கழிவுகளை விட்டுச் சென்றனர். கடந்த ஆண்டு ஜூன் 30}ம் தேதி கூடிய மாநகராட்சி கூட்டத்தில், 15.8.2009 முதல் மெரினா கடற்கரை நீளத்தில் 4.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பாலிதீன் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் 15, 2009 முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்தது. தடை அமல்படுத்தப்பட்ட ஓரிரு தினங்கள் மட்டுமே, பாலிதீன் பொருட்களை யாராவது கடற்கரைப் பகுதிகளில் பயன்படுத்துகிறார்களா? அல்லது விற்பனை செய்கிறார்களா? என மாநகராட்சி ஊழியர்கள் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. இப்போது பெரும்பாலான திண்பண்டங்கள் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. வடை, நிலக்கடலை உள்ளிட்ட திண்பண்டங்கள் பிளாஸ்டிக் கவரில் தரப்படுகின்றன. இதற்கு மேலாக பாக்கெட் குடிநீர் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றைக் கண்காணிக்க இப்போது எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி இனியாவது விழித்துக்கொண்டு மெரினாவில் பாலிதீன் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது போன்ற விஷயத்தில் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் அரசு கொண்டு வரும் திட்டங்கள் நிறைவேறும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Last Updated on Monday, 18 January 2010 06:43